பிரித்தானியாவில் ஒரே வாரத்தில் அதிகரித்த மரணமடைந்தோர் எண்ணிக்கை
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானவர்கள் எண்ணிக்கை 156 என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை 120 என பதிவான இறப்பு எண்ணிக்கை, ஒரே வாரத்தில் சுமார் 30% அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நம்பிக்கை தரும் வகையில் சரிவடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29,547 என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த எண்ணிக்கையானது 37,179 என பதிவாகியிருந்தது.
மட்டுமின்றி, பிரித்தானியாவில் இன்னொரு முழுமையான ஊரடங்கை தவிர்க்கும் பொருட்டு, தமது திட்டங்களையும், பூஸ்டர் தடுப்பூசி தொடர்பான அறிவிப்புகளையும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அடுத்த வாரம் வெளியிடவிருந்த நிலையிலேயே, தொற்று எண்ணிக்கை குறைந்தும், இறப்பு எண்ணிக்கை அதிகரித்தும் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வருடாந்தர காய்ச்சலுக்கான தடுப்பூசி தொடர்பிலும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவிப்பு வெளியிடுவார் என நம்பப்படுகிறது.
இதனிடையே, இந்த குளிர்காலத்தில் நிலைமை மோசமடைய வாய்ப்பிருப்பதாகவும், மீண்டும் மாஸ்க் கட்டாயம் என அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும், பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால், தனிமனித இடைவெளியை பின்பற்றும் நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி கொரோனா பரவல் விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதமும் இனி அமுலுக்கு கொண்டுவரும் திட்டமும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.