பாசத்தை பறித்துக்கொண்ட கொரோனா... தாயை பிரிந்த ஒரு இலங்கைப் பெண்ணின் கண்ணீர் நினைவுகள்
’மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், முத்தம் காமத்தை சேர்ந்தது இல்லை என்று’ என்றொரு திரைப்படப் பாடல் வரி உண்டு.
இன்று, மேற்கத்திய நாடுகள், கேபிள் தொலைக்காட்சி வழியாக கற்றுத்தந்த தவறான பாடங்களில் ஒன்று, கட்டியணைப்பதும் முத்தமிடுவதும் காதலர்களுக்குத்தான் என்பது.
ஆனால், அதே மேற்கத்திய நாட்டவர்கள், கொரோனா காலகட்டத்தில் தங்கள் பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும் கட்டியணைக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டபோது, பைத்தியம் பிடித்தது போல் ஆனார்கள்.
கண்ணாடிக்கு இந்த பக்கம் குழந்தைகள், அந்தப் பக்கம் தாத்தா பாட்டி நின்றுகொண்டு ஏக்கத்துடன் பார்த்துக்கொள்ளும் காட்சிகள் வெளியாகி கவனம் ஈர்த்தன.
அத்துடன் முடிந்துவிடவில்லை... எப்போதும் முத்தமிட்டவாறே சமூக ஊடகங்களில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த காதலர்களும், தம்பதியரும் பொதுமுடக்கத்தின்போது ஒரே வீட்டில் வாழ முடியாமல் அடித்துக்கொண்டதையும் காணும்போது, அவர்களுடைய உண்மையான தோற்றம் வெளிப்பட்டது.
ஆனால், நம்மவர்களுக்கு அப்படியில்லை. பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும் அணைத்துக்கொள்வது நம் கலாச்சாரத்தில் ஊறிப்போன விடயம். அதுவும் நீண்ட நாட்கள் சந்திக்காமல் இருந்த குழந்தைகளை சந்திக்கும்போது கண்ணீர் பெருக நாம் அவர்களை கட்டியணைத்துக்கொள்கிறோம்.
இலங்கையில் பிறந்து கனடாவில் வாழ்ந்துவரும் ஒரு பெண், இந்த அணைப்புகள், அதுவும் கொரோனா காலகட்டத்தில் பெற்றோரை பிரிந்திருந்த பிள்ளைகள், பேரக்குழந்தைகளை பிரிந்திருந்த தாத்தா பாட்டிகள் தங்கள் வாழ்வில் வெளிப்படுத்திய உணர்வுகளை, இந்த செய்தியில் பகிர்ந்துகொள்கிறார்.
Sharon Agardஇன் பெற்றோர் பணி ஓய்வு பெற்றதும், கொஞ்ச நாட்கள் இலங்கைக்கு போய்விட்டு திரும்பலாம் என்று எண்ணி கனடாவிலிருந்து புறப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் இலங்கை சென்ற நேரம் பார்த்து கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக, அவர்களால் ஆறு மாதங்களுக்கு கனடா திரும்ப முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. Sharonஇன் தந்தைக்கு முன்பு இதய நோய் பிரச்சினை இருந்ததால், பெற்றோரை கனடாவுக்கு திரும்ப அழைத்து வருவது வரை ஒவ்வொரு கணமும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறது Sharonஇன் குடும்பம்.
ஒரு வழியாக கடந்த கடந்த ஆண்டு ஜூலை மாதம் பத்திரமாக கனடா வந்து சேர்ந்திருக்கிறார்கள் Sharonஇன் பெற்றோர். தாத்தா பாட்டி வந்து இறங்கியதும், அவர்களை கட்டியணைத்துக்கொள்ள பேரக்குழந்தைகள் ஓட, ’தொடக்கூடாது’ என்று கத்தி பிள்ளைகளை தடுத்து நிறுத்த, அவர்களது முகத்தில் ஏமாற்றம்.
கொரோனா விதிகளின்படி தாத்தா பாட்டியும் பேரக்குழந்தைகளும் தொட்டுக்கொள்ளாமல் தூரத்திலிருந்து ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
குறைந்தது இரு தரப்பும் ஒருவரையொருவர் பார்த்தாவது மகிழட்டும் என, பிள்ளைகளை தாத்தா பாட்டி அமர்ந்திருக்கும் இடத்துக்கு முன்னால் இருக்கும் புல்வெளிகளில் விளையாட விட்டிருக்கிறார்கள், தொட்டுக்கொள்ள அனுமதிக்காமல். இரண்டு வாரங்கள் ஆன நிலையில், தாத்தா பாட்டியைக் கட்டியணைப்பதை, ’Hug Day’ ஆக கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள், Sharonஇன் மூன்று பிள்ளைகளும். வெளியாகியுள்ள வீடியோவில், Sharonஇன் ஐந்து வயது மகள், உங்களைக் கட்டியணைக்க எவ்வளவு நாளாக காத்திருக்கிறேன் தெரியுமா என்று கத்தியபடி தன் பாட்டியைக் கட்டியணைத்துக் கொள்வதைக் காணும்போது நமக்கே சிலிர்க்கிறது.
அவர்கள் மட்டுமா, Sharon, பெற்றோரை அணைத்துக்கொள்ள, அவர்கள் பேரக்குழந்தைகளை அணைத்துக்கொள்ள குடும்பங்கள் கூடுவதையே விழாவாக கொண்டாடும் நிலைமையை உருவாக்கிவிட்டது இந்த பாழாய்ப்போன கொரோனா! இனியாவது மகிழ்ச்சியாக இருக்கலாம் என முடிவெடுக்கும்போது, வாழ்க்கை சிலருக்கு மட்டும் எதிர்பாராத சில விடயங்களைக் கொண்டு வந்துவிடுகிறது. ஆம், Sharonஇன் தாய் உடல் நலம் பாதிக்கப்பட, அவருக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் மற்ற நோயாளிகளை மருத்துவர்கள் சந்திக்க தாமதமாக, மருத்துவர் Sharonஇன் தாயை பார்க்கும்போது நிலைமை கைமீறிப்போய்விட்டிருக்கிறது.
குறிப்பிட்ட கால சிகிச்சைக்குப் பின், இனி தாய் தங்களுடன் இருக்கட்டும் என வீட்டுக்கே அவரை அழைத்து வந்துவிட்டிருக்கிறார்கள். அப்போதும் இந்த குழந்தைகள் பாட்டியை விடாமல் கட்டியணைத்து அன்பைப் பொழிந்திருக்கிறார்கள். அப்படி ஒருநாள் Sharon தன் தாயை இறுக அணைத்துக்கொண்டிருக்கும்போதே, அவரது இதயத்துடிப்பு நின்றுவிட்டிருக்கிறது.
ஏராளம் பேர் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வந்த அந்த பெண்மணியின் இறுதிச்சடங்கில் கூட கலந்துகொள்ள இயலாத சூழலில், குடும்பத்தவர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என பலரும் அவரது இறுதிச்சடங்கில் நேரலையில்தான் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
இப்போது கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டு வருகின்றன, மக்கள் சந்தித்துக்கொள்கிறார்கள் என்பது உண்மைதான் என்று கூறும் Sharon, ஆனால், எங்கள் குடும்பத்தைப் பொருத்தவரை அம்மாவை இனி அணைத்துக்கொள்ள முடியாது, கட்டியணைத்தல் என்பதே அம்மாவை இழந்துவிட்ட வேதனையை நினைவுபடுத்தும் விடயமாகத்தான் உள்ளது என்கிறார்.
சமூக ஊடகங்களில் நீண்ட காலமாக சந்திக்க முடியாமல் இருந்தவர்கள் சந்தித்துக் கட்டியணைத்துக்கொள்வதைப் பார்க்கும்போது, என் மனம் அவர்களுக்காக பொங்குகிறது. ஆனாலும் என்னால் அது முடியாதே என்று நினைக்கும்போது, அந்த நினைவு நொறுங்கிப்போகிறது என்கிறார் Sharon.