சுவிஸ் வாக்கெடுப்பு... முக்கிய விடயங்கள் தொடர்பில் மக்கள் எடுத்துள்ள முடிவு
சுவிட்சர்லாந்து நாட்டில், முக்கிய விடயங்கள் சில தொடர்பில் நேற்று வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. சில நாடுகளில் புதிதாக ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்படும்போது மக்களிடம் அது குறித்து கருத்துக் கேட்காமலே நாட்டின் தலைவர்களே முடிவெடுத்து அறிவித்து விடுவதுண்டு, மக்களாட்சி நடக்கும் நாடுகள் கூட அதற்கு விதிவிலக்கல்ல... ஆனால், சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, சட்டங்கள் இயற்றப்படும் முன், மக்களிடம் கருத்து கேட்டு, அவர்கள் விருப்பதிற்கிணங்கவே சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
அவ்வகையில், சில முக்கிய விடயங்கள் தொடர்பில் நேற்று (13 ஜூன் 2021) வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. அவை என்னென்ன, அவற்றிற்கு சுவிஸ் மக்கள் எப்படி வாக்களித்துள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம். கொரோனா தொடர்பில் அரசே முடிவெடுப்பது தொடர்பில் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதற்கு மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. அரசு கொரோனா தொடர்பில் முடிவெடுக்கலாம் என்பதற்கு ஆதரவாக 60.21 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்தார்கள், தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொலிசாருக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பில் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதற்கு ஆதரவாக 56.58 சதவிகித மக்கள் வாக்களித்து அதை வெற்றிபெறச் செய்துள்ளார்கள். இதுபோக, செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு தொடர்பில் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மக்கள் அதை நிராகரித்துவிட்டார்கள். பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்துவதற்கு எதிராக 39.4 சதவிகிதத்தினரும், பயன்படுத்தலாம் என 60.6 சதவிகிதத்தினரும் வாக்களித்து, செயற்கை பூச்சி மருந்துகள் இல்லாத சுவிட்சர்லாந்து என்ற அந்த மசோதாவை தோற்கடித்துவிட்டார்கள் மக்கள். கார்பன் டை ஆக்சைடு சட்டம் ஒன்றையும் மக்கள் நிராகரித்துவிட்டார்கள். பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தும் அந்த சட்டம் வேண்டாம் என 51.6 சதவிகிதம் மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
அதேபோல், சுத்தமான குடிநீர், ஆரோக்கியமான உணவு என்னும் மசோதாவையும் சுவிஸ்
மக்கள் நிராகரித்துவிட்டார்கள். அந்த சட்டம் வேண்டாம் என 60.7 சதவிகிதம் பேர்
வாக்களித்துள்ளார்கள்.