முடிவுக்கு வரும் கோவிட் பாஸ்: கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
பிரித்தானியாவில் சர்ச்சைக்குரிய கோவிட் பாஸ் பயன்பாடு 15 நாட்களுக்குள் விலக்கிக்கொள்ளப்பட இருப்பதாகவும், Omicron தொற்று சற்றே குறைந்து வரும் நிலையில், அடுத்த மாதம் வாக்கில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய சுகாதாரச் செயலரான சாஜித் ஜாவித், Omicron தொற்று குறைந்து வரும் நிலையில், கொரோனா சான்றிதழ் அல்லது கோவிட் பாஸுக்கான அவசியம் இனி இல்லை என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி, பிரித்தானியாவில் சுமார் 40 சதவிகிதம் அளவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது. அத்துடன், எட்டாவது நாளாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்துகொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஜனவரி 26 அன்று பிளான் B கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சர்கள் மீளாய்வு செய்ய இருக்கும் நிலையில், வீட்டிலிருந்து வேலை பார்க்கும் விதியை விலக்கிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆக, பிப்ரவரியில், மாஸ்க் அணிதல் கட்டாயம் என்னும் கட்டுப்பாடு மட்டுமே அமுலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.