சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் எப்போது முடிவுக்கு வரும்? சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ஆகத்து மாதத்தில் முடிவுக்கு வரலாம் என சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையும், கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
இதற்கு நமது பெரும் முயற்சி காரணம் என்று கூறியுள்ள சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset, ஒவ்வொரு நெகிழ்த்தலும் அபாயகரமானதுதான் என்றும் அப்படி நெகிழ்த்தியதற்காக நாம் விமர்சனங்களுக்கும் ஆளானோம் என்றும், ஆனால், பெடரல் கவுன்சிலின் நோக்கம் எப்போதுமே முடிந்தவரையில் சீக்கிரமாக சகஜ நிலைக்குத் திரும்புவதுதான் என்றும் கூறியுள்ளார்.
சகஜ நிலைக்குத் திரும்புவதற்கு தடுப்பூசிதான் ஒரே வழி. இந்த விடயத்தில் பெடரல் கவுன்சில் தெளிவாக உள்ளது. எவ்வளவு சீக்கிரம் விருப்பம் தெரிவிக்கும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குகிறோமோ அவ்வளவு சீக்கிரம் கட்டுப்பாடுகளை நெகிழ்த்தலாம் என்று கூறும் Alain Berset, ஆகத்து துவக்கத்தில் இது சாத்தியமாக வாய்ப்புள்ளது என்கிறார்.
திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்களைப் பொருத்தவரையில், இதுவரை அவை தடுப்பூசிகள் விடயத்தில் பிரச்சினை ஏற்படுத்தியதாக தெரியவில்லை என்று கூறியுள்ளார் Alain Berset.
இருந்தாலும், எதிர்காலத்தில் தடுப்பூசிகளை தொடர்ந்து வழக்கமாக போடவேண்டிய
அவசியம் ஏற்படுமா என்று இப்போதைக்கு கூற முடியாது என்று கூறியுள்ள அவர்,
இப்போதைக்கு தடுப்பூசிகளால் உருவாகும் பாதுகாப்பு எதிர்பார்த்ததைவிட அதிக
காலம் நீடிப்பது போல் தெரிவதாகவும், ஆனாலும், இந்த கொரோனா வைரஸைப் பொருத்தவரை,
அது தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும், மாறிக்கொண்டேதான் இருக்கும் என்று
தோன்றுகிறது என்றும் கூறியுள்ளார்.