கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையிலும் கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் சுவிட்சர்லாந்து: காரணம் என்ன?
கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையிலும், கொரோனா கட்டுப்பாடுகள் சிலவற்றை சுவிட்சர்லாந்து நெகிழ்த்துவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஏப்ரல் 19 துவங்கி, உணவகங்களும் மதுபான விடுதிகளும் தங்கள் கட்டிடங்களுக்கு வெளியேயும், மொட்டை மாடிகளிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண, குடிக்க மீண்டும் அனுமதிக்கலாம் என இந்த புதன்கிழமை பெடரல் கவுன்சில் அறிவித்தது. அத்துடன், திரையரங்குகள் விளையாட்டுத்திடல்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset, நாட்டில் கொரோனா தொற்றின் நிலைமை இன்னமும் கட்டுக்குள் அடங்கவில்லை என்றும், சொல்லப்போனால் கடந்த சில வாரங்களாக நிலைமை மோசமடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஆகவே, நாம் ரிஸ்க் எடுத்துத்தான் இந்த கட்டுப்பாடுகளை நெகிழ்த்தியுள்ளோம் என்கிறார் அவர். பொதுமுடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சில நெறிமுறைகள் வகுத்திருந்தார்கள் அதிகாரிகள்.
அதன்படி, 14 நாட்களுக்கு தொற்று வீதம் 5 சதவிகிதத்துக்கு குறைவாக இருக்கவேண்டும், தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் கொரோனா நோயாளிகள் 25 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும், R வீதம், அதாவது ஒருவரிடமிருந்து கொரோனா எத்தனை பேருக்கு பரவமுடியும் என்ற எண்ணிக்கை ஒன்றுக்கு கீழே இருக்கவேண்டும், அப்போதுதான் கட்டுப்பாடுகளை நெகிழ்த்தவேண்டும் என்று கூறியிருந்தார்கள்.
தற்போது, அவைகளில் ஒன்றே ஒன்றைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மட்டும் 23 சதவிகிதத்திற்கு கீழே வந்துள்ளது, அவ்வளவுதான்.
தினசரி கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை ஏப்ரலில் இரண்டு மடங்காக உயர்ந்து 1000இலிருந்து நாளொன்றிற்கு 2000 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், அரசு கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்த முடிவு செய்துள்ளது.
ஆகவே, இப்படிப்பட்ட ஒரு நிலைமையிலும் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்த காரணம் என்ன? அந்த கேள்விக்கான பதில், சுவிட்சர்லாந்தில் கொரோனா நிலைமை மொத்தமாக பார்த்தால் ஓரளவுக்கு சீராகவே உள்ளது, அல்லது, தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மோசமாக இல்லை என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
உதாரணமாக, கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே சென்றபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பயங்கரமாக அதிகரிக்கும் என அஞ்சினோம் என்று கூறும் அதிகாரிகள், ஆனால், மருத்துவமனைகளால் சமாளிக்கும் அளவுக்கே தொற்று இருந்தது என்கிறார்கள்.
அதேபோல், கொரோனா பலி எண்ணிக்கையும் உயரவில்லை. மேலும், இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒரு முறை புதிதாக கொரோனா தொற்று அதிகரிக்கும் என பெடரல் கவுன்சில் எதிர்பார்த்த நிலையில், அப்படியும் நடக்கவில்லை.
கொரோனா எண்ணிக்கை மெதுவாக அதிகரித்தது உண்மைதான், ஆனால், வெடித்துக்கிளம்புவது போல அது அதிகரிக்கவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
அதே நேரத்தில், அரசியல் மற்றும் வர்த்தக அமைப்புகள், நீண்ட கால பொதுமுடக்கம் பொருளாதாரத்துக்கும் நல்லதல்ல, மக்களுடைய மன நலனுக்கும் நல்லதல்ல என்று கூறி கட்டுப்பாடுகளை நெகிழ்த்துமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தார்கள்.
கடந்த சில வாரங்களைப் பார்க்கும்போது, கொரோனா தொற்று பரவல் அந்த அளவுக்கு
மோசமாக இல்லை, நாம் கட்டுப்பாட்டை இழக்கவில்லை என்று கூறியுள்ளார்
சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset.
தடுப்பூசிகளும் அதிக அளவிலான பரிசோதனைகளும் கைவசம் இருக்க, கொஞ்சம்
எச்சரிக்கையாக நம்மால் அடி எடுத்துவைக்கமுடியும் என்கிறார் அவர்.