பிரித்தானியா அரசால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன! போக்குவரத்து செயலாளர் முக்கிய அறிவிப்பு
பிரித்தானியா அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கொரோனா பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.
நீக்கப்படும் கொரோனா பயணக் கட்டுப்பாடுகள் குறித்து பிரித்தானியா போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது, பிப்ரவரி 11 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல், பிரித்தானியாவிற்கு வரும் முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகள் வருகைக்கு பின் மேற்கொள்ள வேண்டிய lateral flow சோதனைகளை செய்ய வேண்டிய அவசியமில்லை.
முழுமையாக தடுப்பூசி போட்ட வரையறை என்பது, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் அல்லது ஜான்சென் தடுப்பூசியின் ஒரு டோஸ் ஆகும்.
எனவே பயணிகள் பூஸ்டர் டோஸ் போட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
அதேசமயம் சீனா மற்றும் மெக்ஸிகோ உட்பட 16 புதிய நாடுகளின் தடுப்பூசி சான்றிதழ்கள் பிரித்தானியா எல்லையில் ஏற்றுக்கொள்ளப்படும்.
அதாவது 180க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களின் தடுப்பூசி சான்றிதழ்களை பிரித்தானியா ஏற்றுக்கொள்ளும்.
பிரித்தானியா வரும் முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள், அவர்கள் வந்த பிறகு தனிமைப்படுத்தவோ அல்லது எட்டு நாள் பிறகு மேற்கொள்ள வேண்டிய பரிசோதனையை மேற்கொள்ளவோ தேவையில்லை.
அவர்கள் பயணம் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற பரிசோதனைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் மற்றும் இருப்பிடப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
மேலும் அவர்கள் வருகைக்குப் பிந்தைய PCR சோதனையை எடுக்க வேண்டும் என்று ஷாப்ஸ் கூறினார்.