கோவாக்ஸினை விட கோவிஷீல்டு தடுப்பூசி சிறந்தது! ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்
இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் ஆச்சரியமூட்டும் ஆன்டிபாடி ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் 2021 ஜனவரி மாதம் பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் அக்ஸ்போர்டு பல்கலைக்கக்கத்துடன் இணைந்து தாயாரித்த கோவிஷீல்டு ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டன.
இரு தடுப்பூசிகளும் கொரோனா வைரசுக்கு எதிராக சிறந்த பலன் அளிக்கக்கூடியதாக இருப்பினும், தற்போது நடத்தப்பட்ட 'ஆன்டிபாடி' ஆய்வு முடிவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசி அதிக பலனை அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக்கின் கோவாக்சினுடன் ஒப்பிடும்போது அஸ்ட்ராஜெனேகாவின் கோவிஷீல்டில் செரோபோசிட்டிவிட்டி விகிதங்களும் (seropositivity rate) சராசரி ஸ்பைக் ஆன்டிபாடி டைட்ரேவும் கணிசமாக அதிகமாக இருப்பதாக, கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை மதிப்பாய்வு செய்யும் COVAT ஆய்வுக்குழு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 515 சுகாதாரப் பணியாளர்கள் (305 ஆண்கள் மற்றும் 210 பெண்கள்) மீது இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 425 பேர் கோவிஷீல்ட் பெற்றவர்கள் மற்றும் 90 பேர் கோவாக்சின் தடுப்பூசியை பெற்றவர்கள்.
இதில் கோவிஷீல்டை பெற்ற 425 பேரில் 98.1 சதவீதம் பேருக்கு செரோபோசிட்டிவிட்டி காணப்பட்டது. அதேபோல் கோவாக்சின் தடுப்பூசியை பெற்ற 90 பேரில் 80 சதவீதம் பேருக்கு மட்டுமே செரோபோசிட்டிவிட்டி காணப்பட்டுள்ளது.
சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் டோஸை மாநில அரசுகளுக்கு ரூ.300-க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600-க்கும் வழங்கி வருகிறது. அதேபோல், பாரத் பயோடெக் ஒரு கோவாக்சின் டோஸின் விலையை மாநிலங்களுக்கு ரூ .400 ஆகவும், தனியார் சந்தைகளுக்கு ரூ .1200 ஆகவும் நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.