மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; CPI, CPIM போட்டி
cpim and cpi to contest in madurantakam and dharapuram by election: இடைத்தேர்தலில், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள CPI, CPIM
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் பட்டியலை தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தவெக அரசை வெளியிலிருந்து ஆதரித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைதேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

இடைத்தேர்தல் குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், "நாங்கள் யாருடைய கூட்டணியிலும் இல்லை. இந்த இடைத்தேர்தல் இயல்பானது அல்ல, திணிக்கப்பட்ட ஒன்று.
ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறோம்.
தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும. எளிய உழைக்கும் மக்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க இடதுசாரிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும்" என அறிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை கூட்டதிற்க்கு பிறகு பேசிய CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம், தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும்.

தவெகவுக்கு ஆதரவு இல்லை என்பதால் திமுகவுக்கு ஆதரவு என்று அர்த்தம் இல்லை. இடைத்தேர்தலில் இடதுசாரிக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். நாளை மறுநாள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும்" என அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி இன்று 2 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது.