ஒரு நாள் போட்டியில் வரலாற்றை படைக்கவுள்ள இந்திய ஆணி!
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆயிரம் போட்டிகளில் பங்கேற்ற முதல் அணி என்ற வரலாற்றை படைக்க இந்திய அணி காத்திருக்கிறது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மூன்று ஒருநாள், மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளன.
ஒருநாள் போட்டிகள் ஆமதாபாத், ஜெய்ப்பூர், கோல்கட்டாவிலும், டி-20 போட்டிகள் கட்டாக், விசாகப்பட்டணம், திருவனந்தபுரத்தில் நடக்க இருந்தன. ஆனால் கொரோனா பரவல் வேகம் எடுத்ததால் ஆமதாபாத், கோல்கட்டாவில் மட்டும் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன் படி, பிப்ரவரி 6, 9, 11 ஆகிய திகதிகளில் ஒருநாள் போட்டிகள் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மோடி மைதானத்தில் நடக்கவுள்ளன. இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் தற்போது தனிமையில் உள்ளனர்.
பிப்ரவரி 4 முதல் பயிற்சியில் ஈடுபட காத்திருக்கின்றனர். பிப்ரவரி 6-ஆம் திகதி இந்தியா மற்றும் விண்டீஸ் மோதும் முதல் போட்டி, கிரிக்கெட் அரங்கில் புதிய வரலாறு படைக்க காத்திருக்கிறது.
இது இந்திய அணியின் 1000-வது ஒருநாள் போட்டியாகும். தவிர இந்த இலக்கை எட்டும் முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற உள்ளது.
இந்திய அணி இதுவரை மோதிய 999 போட்டிகளில் 518-ல் வென்றுள்ளது. 431 போட்டிகளில் தோற்ற இந்தியா, 9 போட்டிகளை சமன் செய்தது. 41 போட்டிகளுக்கு முடிவு கிடைக்கவில்லை.
இந்த வரிசையில் அவுஸ்திரேலியா (958), பாகிஸ்தான் (936) அணிகள் அடுத்த இரு இடங்களில் உள்ளன.
இதுகுறித்து குஜராத் கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட செய்தியில், மேற்கிந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை நடத்த நாங்கள் தயாராகி வருகிறோம். ஆமதாபாத்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். தற்போதுள்ள கொரோனா சூழல் காரணமாக, ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
பிப்ரவரி 6-ஆம் திகதி நடக்க உள்ள இந்திய அணியின் 1000-வது போட்டி வரலாற்று சிறப்பு மிக்கதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதும் டி-20 போட்டிகள் பிப்ரவரி 16, 18, 20ல் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ளன.
இதை நேரில் காண, 75 சதவீத ரசிகர்களுக்கு மேற்குவங்க அரசு அனுமதி தந்துள்ளது. இதனால் குறைந்தது 50,000 ரசிகர்கள் காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி 1974-ல் தனது முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக மோதியது. அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி, இப்போட்டியில் 4 விக்கெட்டில் வீழ்ந்தது.
2002-ல் கங்குலி தலைமையில் 500-வது போட்டியில் பங்கேற்றது (முடிவில்லை). தற்போது ரோகித் தலைமையில் இந்தியா 1000-வது போட்டியில் பங்கேற்க உள்ளது.