இலங்கையை துவம்சம் செய்த இந்தியா! ஒரே போட்டியில் புதிய சாதனைகள்!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இலங்கைக்கு எதிரான இன்றைய முதல் டி20 போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகியதாக ரோகித் சர்மா தெரிவித்தார். அறிமுக வீரராக தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
கடந்த போட்டியிலிருந்த 6 இந்திய வீரர்கள் இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இல்லை. இந்திய அணியில் தொடக்கம் முதலே இஷான் கிஷன் அதிரடியை காட்டினார். கருணரத்னே வீசிய 3-வது ஓவரில் இஷான் கிஷன் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் 5.2 வது ஓவரிலேயே இந்திய அணி 50 ஓட்டங்களை எட்டியது.
இஷான் கிஷன் 43 ஓட்டங்கள் அடித்திருந்த போது இலங்கை வீரர்கள் ஒரு கேட்சை தவறவிட்டு, அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினர். 30 பந்துகளில் இஷான் கிஷன் அரைசதம் விளாசினார். ரோகித் சர்மாவும் தனது அதிரடிய காட்டியதால் 10.2வது ஓவரில் இந்திய அணி 100 ஓட்டங்களை கடந்தது.
இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித் 44 ஓட்டங்கள் அடித்தன் மூலம் 3,307 ஓட்டங்களை குவித்து, சர்வதேச டி20 போட்டியில் அதிக ஓட்டங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 56 பந்துகளை எதிர்கொண்ட அவர் 89 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். இதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் 25 பந்துகளில் அரைசதம் விளாச, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் குவித்தது.
200 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி முதல் பந்திலேயே புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் முதல் விக்கெட்டை இழந்தது. காமில் மிஸ்ஹரா, ஜெனித் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திமால் 10 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.
கேப்டன் சனாகா 3 ஓட்டங்களில் வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட் இழந்தாலும், மறுமுனையில் அசலங்கா பொறுமையாக விளையாடி அரைசதம் அடித்தார்.
இறுதியில் கருணரத்னே,சமிரா ஆகியோர் போராடினாலும், இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 137 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் தொடர்ந்து 10 டி20 போட்டியில் இந்திய அணி வென்று சாதனையை படைத்துள்ளது. இந்தப் போட்டியில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்தார்.