ரோஹித், யாதவ் அதிரடி., 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்க்கு முதன்முறையாக அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் நிக்லோஸ் பூரானை தவிர மற்றவர்கள் யாரும் ஜொலிக்கவில்லை. நிக்லோஸ் பூரன் ம்ட்டும் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 61 ஓட்டங்களை எடுத்தார்.
இதனால் மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் ஹர்சல் படேல் 2 விக்கெட்களையும் அறிமுக பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ஓட்டங்களை மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
அதிலும் ஹிட்மேன் ரோஹித் சர்மா 19 பந்துகளில் 40 ஓட்டங்களை குவித்து பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து இஷான் கிஷானும் 35 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய விராட் கோலி கடந்த சில போட்டிகளில் ஓட்டம் எடுக்க முடியாமல் திணறியா நிலையில், அவரும் 17 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்துவந்த ரிஷப் பன்ட் 8 ஓட்டங்களில் வெளியேறினார்.
இந்திய அணி 14.3 ஒவர்களில் 114 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து சற்று தடுமாற்றம் கண்டது. அந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஸ் ஐயர் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர்.
இறுதியாக இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் 34 ஓட்டங்களும், வெங்கடேஸ் ஐயர் 13 பந்துகளில் 24 ஓட்டங்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.