24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது.
ஐபிஎல் 15-வது சீசனின் 63-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான முக்கியமான போட்டி மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் இன்று நடந்தது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு முன்னேறலாம் என்ற நிலையில் லக்னோ அணியும், இந்த போட்டியில் வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பை வலுவாக்கலாம் என்ற நிலையில் ராஜஸ்தான் அணியும் களமிறங்கின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் துடுப்பாட தேர்வு செய்ததையடுத்து,தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 2 ஓட்டங்களில் ஆவேஷ் கான் பந்தில் வெளியேறினார். ஆனால் இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடித்து ஆடி 29 பந்தில் 41 ஓட்டங்களை அடித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 32 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
4-ஆம் வரிசையில் இறங்கிய தேவ்தத் படிக்கல் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து 18 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால், சாம்சன், படிக்கல் ஆகிய மூவருமே நல்ல தொடக்கம் கிடைத்தும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. ஆனால் அதிரடியாக நல்ல ஸ்டிரைக் ரேட்டில் ஆடியதால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
அடித்து ஆடியாக வேண்டிய முக்கியமான கட்டத்தில் இன்னிங்ஸின் 18-வது ஓவரில் ரியான் பராக் (19) மற்றும் ஜிம்மி நீஷம் (14) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க, டெத் ஓவரில் டிரெண்ட் போல்ட் ஒருசில பவுண்டரிகளை விளாசியதால் 20 ஓவரில் 178 ஓட்டங்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி.
179 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய லக்னோ அணி 20 ஓவரில் 154 ஓட்டங்கள் அடித்து 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், பிளே ஆஃப் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது ராஜஸ்தான் அணி.