லக்னோ பந்துவீச்சை நாலாபுறமும் தெறிக்கவிட்ட சென்னை! 211 ஓட்டங்கள் இலக்கு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 211 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசனில், இன்று நடைபெற்று வரும் 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 1 ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். மறுமுனையில் ராபின் உத்தப்பா சென்னை அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுத்தார். பவர் பிளேவில் லக்னோ பந்து வீச்சாளர்களை திணறடித்த அவர் பவுண்டரிகளை விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். பின்னர் தனக்கான 27-வது பந்த சந்தித்த நிலையில் அதே 50 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அதன் பிறகு மொயின் அலியும் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டார். அவர் 22 பந்துகளில் 35 ஓட்டங்கள் குவித்து அவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் துபே மற்றும் ராயுடு ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி மீண்டும் லக்னோ பந்துவீச்சாளர்களுக்கு சவால் அளித்தனர்.
இருவரும் அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக அடித்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவம் துபே 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கடைசி நேரத்தில் களமிறங்கிய எம்எஸ் தோனி தான் சந்தித்த முதல் 2 பந்துகளிலே பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
கடைசி ஓவரில் அணியின் கேப்டன் ஜடேஜா தனது பங்கிற்கு பவுண்டரி அடிக்க சென்னை அணி 200 ஓட்டங்களை கடந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்கள் குவித்தது.
இதன் மூலம் சென்னை அணி 211 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்துள்ளது.