90 ஆண்டுகளில் பார்க்காத சரிவு! தென் ஆப்பிரிக்காவை சில்லு சில்லா சிதறடித்த மாட் ஹென்றி
நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
நேற்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் துடுப்பாட களமிறங்கினர். இந்தியாவை வீழ்த்திய மெதப்பில் இருந்த தென்னாப்பிரிக்கா அசால்டாக இந்த தொடரில் பங்கேற்றது. ஆனால், நியூசிலாந்து வீரர்களின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறினர்.
தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கார் 1 ஓட்டத்திலும், செரல் இர்வ் 10 ஓட்டங்களிலும், நட்சத்திர வீரர் மார்க்ரம் 15 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஹென்ரி, ஜெமிசன் பந்துவீச்சில் வெளியேறினர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெண்டர் டுசைன் 8 ஓட்டங்களிலும், பெவுமா 7 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்க அணி 52 ஓட்டங்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் பின்னர் ஹென்ரி வீசிய ஆட்டத்தின் 46வது ஓவரில் தென்னாப்பிரிக்க வீரர்கள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து ஹென்ரிக்கு ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவருக்கு கைக் கூடவில்லை.
இதனால் கடைசி விக்கெட்டை வெக்னர் வீழ்த்தினார். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 95 ஓட்டங்களில் சுருண்டது.
கடந்த 21 டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். அதாவது, தென்னாப்பிரிக்க அணி கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சரிவாகும். 100 ஓட்டங்களை தாண்ட முடியாமல் பெரும் சோகத்துக்கு உள்ளானது. 1932 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் தென்னாப்பிரிக்கா கடைசியாக இது போன்று சொற்ப ஓட்டங்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து வீரர் மாட் ஹென்ரி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
தென்னாப்பிரிக்க வீரர் கீகன் பீட்டர்சன் இந்த தொடரில் இடம்பெறவில்லை. இதனால் தென்னாப்பிரிக்க அணியின் மானம் கப்பலில் ஏறியது.
இதனையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிஎஸ்கே வீரர் கான்வே 36 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்கள் எடுத்துள்ளது.