இலங்கையை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி! சர்வதேச டி20 போட்டியில் புதிய சாதனை
இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா ஏற்கனவே இந்த தொடரை வென்ற நிலையில், கடைசி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.
இப்போட்டியில் முகமது சிராஜ், அவேஷ் கான், ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கியது.
முகமது சிராஜ் மற்றும் அவேஷ் கான் ஆகியோரின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை வீரர்கள் தடுமாறி வருகின்றனர். முகமது சிராஜ், அவேஷ் கான் ஆகியோர் அபாரமாக பந்துவீச, இலங்கை அணி பவர் பிளேவில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதே போன்று அசலங்கா, லியாங்கே, சந்திமாஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது. இதனையடுத்து கேப்டன் சனாகா அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
இறுதியில் சனாகா 38 பந்துகளில் 74 ஓட்டங்கள் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் இலங்கை அணி 68 ஓட்டங்கள் எடுத்தது.
147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 18 ஓட்டங்களில் வெளிறினார்.
தீபக் ஹுடாவுக்கு 4-வது வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. அவர் 16 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்தார். தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் 5 ஓட்டங்களில் வெளியேற, ஆட்டம் பரபரப்பானது. எனினும் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு முனையில் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
அவருக்கு ஜடேஜாவும் துணை நிற்க, இருவரும் பொறுப்புடன் விளையாடி 16.5-வது ஓவரில் இந்திய அணி இலக்கை 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடர்ந்து 12 சர்வதேச டி20 போட்டியில் வென்றுள்ள இந்திய அணி நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிரான தொடரை முழமையாக வென்று அசத்தியுள்ளது.