இவளோ நாள் எங்கய்யா இருந்தீங்க! 6.3 ஓவரில் ஆட்டத்தை முடித்த இந்தியா., ஸ்காட்லாந்துக்கு எதிராக அபார வெற்றி
டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசாதாரண வெற்றிபெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில், இன்று நடந்த 37-வது லீக் ஆட்டத்தில், இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி இந்தியாவின் வெறித்தனமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ஸ்காட்லந்து அணி 17.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 85 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா, ஷமி (ஹாட்ரிக்) ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகள் மற்றும் அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 86 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பேட்டிங்கை இந்திய அணி துவங்கியது. ஆனால், அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள அந்த எண்ணிக்கையை 7.1 ஓவர்களில் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.
எதிர்பார்த்தபடி துவக்கம் முதலே ஸ்காட்லாந்து அணியின் பந்து வீச்சை இந்திய அணி புரட்டியெடுத்தது. குறிப்பாக கே.எல் ராகுல் ஆட்டத்தில் அனல் பறந்தது.
கே.எல் ராகுல் பேட்டில் பட்ட பந்துகள் அனைத்தும் சிக்சரும் பவுண்டரிகளுமாக பறந்தன.
இதனால் வெறும் 6.3 ஓவர்களில் 89 ஓட்டங்கள் அடித்த இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
'இவ்வளவு நாளா எங்கய்யா இருந்தீங்க?' என்பது போல், பந்துவீச்சிலும் சரி, துடுப்பாட்டத்தில் சரி இந்திய அணியின் இன்றைய ஆட்டம் ரசிகர்களை அசரவைத்தது.
19 பந்துகளில் கே.எல் ராகுல் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். ஆட்ட நாயகன் விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற கடைசி போட்டியில் நமீபியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.
அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தினால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும்.