மிரட்டிய விராட் கோலி, கே.எல் ராகுல் ஜோடி:6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவை சுருட்டிய இந்தியா
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது, இதில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் ஓட்டங்கள் எடுக்காமல் 2வது பந்திலேயே அவுட் ஆனார். பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வார்னர் - ஸ்மித் கூட்டணி 69 ஓட்டங்கள் சேர்த்தது. 41 ஓட்டங்கள் எடுத்திருந்த வார்னர், குல்தீப் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய லபுசாக்னே விக்கெட் சரிவை கட்டுப்படுத்த பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து பந்துவீச வந்த ஜடேஜா ஸ்மித்தை 46 ஒட்டங்களிலும், லபுசாக்னேவை 27 ஓட்டங்களிலும் வெளியேற்றினார்.
பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 199 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இந்திய அணியின் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்திய அணியை தூக்கி நிறுத்திய விராட் கோலி
இதையடுத்து சற்று எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கினாலும், தொடக்க வீரர்களான ரோகித் சர்மா ஹேசில்வுட் பந்திலும், மற்றும் இஷான் கிஷான் ஸ்டார்க் பந்துவீச்சிலும் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர்.
இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் ஹேசில்வுட் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்து இக்கட்டான நிலையில் பரிதவித்தது.
இதன் பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
விராட் கோலி 116 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்கள் குவித்து ஹேசில்வுட் பந்துவீச்சில் அவுட்டானார்.
உலகக்கோப்பையில் இந்தியாவின் பந்துவீச்சுக்கு அடிபணிந்த அவுஸ்திரேலியா! ஜடேஜா சுழலில் 199க்கு சுருண்டது
ஆனால் இறுதி வரை ஆட்டமிழக்காமல் கே.எல் ராகுல் 115 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 97 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார்.
இறுதியில் இந்திய அணி 41.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ஓட்டங்கள் குவித்தது, அத்துடன் அவுஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |