ரன் எடுக்க ஓடிய கிரிக்கெட் வீரர் மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணம்: என்ன நடந்தது?
கிரிக்கெட் விளையாடிய வீரர் ரன் எடுக்க ஓடிய போது மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே இளைஞர்களுக்கு மத்தியில் மாரடைப்பு பெரிய சோகமான விடயமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகிவிட்டது. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பால் மரணம்
கிரிக்கெட் போட்டியின் போது விகாஸ் நேகி (34) என்ற வீரர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர், இந்திய தலைநகர் டெல்லியில் பொறியாளராக பணியாற்றி வந்ததுள்ளார். மேலும், இவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
இவர் உயிரிழந்த சம்பவம் சனிக்கிழமை நடந்திருந்தாலும் அது தொடர்பான வீடியோ தற்போது தான் வெளியாகியுள்ளது.
நொய்டாவின் செக்டார் 135ல் கட்டப்பட்ட புதிய மைதானத்தில் மேவரிக்-11 மற்றும் பிளேசிங் புல்ஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது, முதல் இன்னிங்சிலேயே இந்த சோகமான நிகழ்வு நடந்துள்ளது.
என்ன நடந்தது?
முதலில் மேவரிக்-11 இன் பேட்டிங் செய்தது. அப்போது அணியின் பேட்ஸ்மேன்களான உமேஷ் குமாரும் விகாஸ் நேகியும் களத்தில் இருந்தனர். அப்போது போட்டியில் 15 -வது ஓவரில் உமேஷ் குமார் அடிக்க, அந்த பக்கம் இருந்து விகாஸ் நேகி ரன் எடுக்க ஓடினார்.
அப்போது பந்து பவுண்டரியை தொட்டது. இதனால் விகாஸ் நேகி மறுமுனைக்கு மாற முயன்றார். அப்போது அவர் திடீரென சரிந்து விழுந்தார். அவரை பார்த்த பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களும் பதற்றத்தில் ஓடி வந்தனர். சில நிமிடங்களிலே அவருக்கு முதலுதவி செய்ய தொடங்கினர்.
பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது, இந்த சம்பவத்தின் வீடியோ பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |