தரவரிசையில் இந்தியா முதலிடம்…மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரோஹித் சர்மா சாதனை
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார்.
முதலிடத்தில் இந்திய அணி
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது, இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்த நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 385 ஓட்டங்கள் குவித்து இருந்தது.
386 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி 1.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது, இதனால் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி பெற்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3-0 என்ற நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது, மேலும் இந்த அடுத்தடுத்த தொடர் வெற்றிகள் மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 114 ரேட்டிங் உடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
1010 நாட்களுக்கு பிறகு
இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சதமடிக்காமல் இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் நியூசிலாந்து எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கிட்டத்தட்ட 1101 நாட்களுக்கு பிறகு, அதாவது 3 வருடங்களுக்கு பிறகு சதம் விளாசி அசத்தியுள்ளார்.
மேலும் கேப்டன் ரோஹித் சர்மா 85 பந்துகளில் 9 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என விளாசி 101 ஓட்டங்கள் குவித்து இருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவுக்கு ஒருநாள் போட்டிகளில் இது 30வது சதமாகவும், அத்துடன் ஒட்டுமொத்தமாக இது 43வது சதமாகும்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ரோஹித் சர்மா மீண்டும் சதமடித்து இருப்பது இந்திய ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.