மேற்கத்திய நாடுகளை சாடிய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: இலங்கை நிலை குறித்து வெளிப்படை
உக்ரேன் தொடர்பாக ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் அந்த நாட்டை மண்டியிட வைக்காது என்று இலங்கையின் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் குறித்த கடும்போக்கு நடவடிக்கையால் மூன்றாம் உலக நாடுகள் தான் மிக மோசமாக உணவு பற்றாக்குறை, விலைவாசியுயர்வு என பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விண்ணை முட்டும் உணவு மற்றும் எரிபொருள் விலைகள், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் வருமான இழப்பு ஆகியவை ஆறு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களை பட்டினிக்கு தள்ளியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டுவர வேண்டும் எனவும், உலகெங்கிலும் உள்ள மக்களின் மேலதிக துன்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இலங்கையின் தற்போதைய பிரச்சினைகள் அனைத்தும் தவறான கொள்கை முடிவுகளால் ஓரளவு சுயமாக உருவாக்கப்பட்டது எனவும் ஓரளவு உலகளாவிய நெருக்கடி காரணமாக உருவானது என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் ஒருபோதும் பயன் தராது என் குறிப்பிட்டுள்ள விக்ரமசிங்க, இது உலகளாவிய விலைவாசி உயர்வுக்கு மட்டுமே வழிவகுக்கும் என்றார்.
பொருளாதாரத் தடைகளால் ரஷ்யா ஒருபோதும் மேற்கத்திய நாடுகளிடம் மண்டியிடாது என குறிப்பிட்டுள்ள விக்ரமசிங்க, இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மூன்றாம் உலக நாடுகள் தான் மண்டியிடும் சூழல் உருவாகும் என்றார்.
உக்ரைன் போருக்காக இதுவரை உலக நாடுகள் 100 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையின் நெருக்கடி நிலையை உணர்ந்து குறிப்பிட்ட நாடுகள் 14 பில்லியன் டொலர்கள் தொகையை அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது இலங்கையிடம் ஐந்து மாதங்களுக்கு தேவையான அரிசி இருப்பு உள்ளது என்றும் மூன்று மாதங்களுக்கு இறக்குமதி ஆகும் எனவும் பதில் ஜனாதிபதி விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.