ஒரு பிரித்தானியக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக குடியுரிமை வழங்கிய நாடு: நெகிழவைக்கும் ஒரு செய்தி
ஒரு எட்டு மாதக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, ஒரு நாடு, அந்தக் குழந்தைக்கு குடியுரிமை வழங்கியதைக் குறித்த நெகிழவைக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அபூர்வ நோயால் வாடும் குழந்தைகளின் தலைவிதி
உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் எவ்வளவு விலைமதிப்பில்லாதது, எவ்வளவு முக்கியமானது என்பது மற்றவர்களைவிட, அந்தக் குழந்தையின் பெற்றோருக்குத்தான் நன்கு புரியும். பத்து மாதங்கள் பிள்ளைக்காக காத்திருந்து, அது பிறந்தபின் அதற்கு ஒரு பிரச்சினை என்றால், அந்தக் குழந்தையை யாரும் சாகட்டும் என விட்டுவிடுவதில்லை. எப்படியாவது தங்கள் பிள்ளையைக் காப்பாற்றிவிடவேண்டும் என்றுதான் எந்த பெற்றோரும் விரும்புவார்கள்.
ஆனால், மேலை நாடுகளில், குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கருதும் சில நோய்கள் கொண்ட குழந்தைகளுக்கு அளிக்கப்படும் செயற்கை சுவாசத்தை நிறுத்திவிடும் ஒரு வழக்கம் உள்ளது. 2018ஆம் ஆண்டு, பிரித்தானியக் குழந்தையான ஆல்ஃபீ இவான்ஸ் என்னும் குழந்தையை அதன் பெற்றோர் இத்தாலியிலுள்ள Bambino Gesu என்னும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அனுமதியளிக்கக் கோர, நீதிமன்றம் அனுமதி மறுக்க, செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்ட சில நாட்களில் ஆல்ஃபீ இறந்துபோனான். அந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
மீண்டும் அதேபோல் போராடும் ஒரு குழந்தையின் பெற்றோர்
பிரித்தானியக் குழந்தையான இண்டி (Indi Gregory) பிறந்து எட்டு மாதங்களே ஆகிறது. அவளுக்கு, ஒரு அபூர்வ மைட்டோக்காண்ட்ரியா நோய். அதாவது, அவளுடைய உடலிலுள்ள செல்களால் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியாது.
FAMILY PHOTO
இங்கிலாந்திலுள்ள ஒரு மருத்துவமனையில் அவள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையால் இனி பயனில்லை, ஆகவே, அவளுக்கு கொடுக்கப்பட்டுவரும் செயற்கை சுவாசத்தை நிறுத்துவது என மருத்துவமனை முடிவு செய்துள்ளது.அதற்கு நீதிமன்றமும் அனுமதியளித்துவிட்டது.
குழந்தை இண்டியின் பெற்றோர், குழந்தை ஆல்ஃபீயின் பெற்றோரைப்போலவே, தங்கள் குழந்தையை இத்தாலியிலுள்ள Bambino Gesu மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதி கோரினார்கள்.
இத்தாலி எடுத்த அதிரடி நடவடிக்கை
இந்த தகவல் அறிந்த இத்தாலி பிரதமர், நேற்று உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டினார். நாடாளுமன்றத்தில், குழந்தை இண்டிக்கு இத்தாலிக் குடியுரிமை வழங்கப்பட்டது.
நேற்று, குழந்தை இண்டிக்காகவே இத்தாலி நாடாளுமன்றம் கூடியது குறிப்பிடத்தக்கது.
Dicono che non ci siano molte speranze per la piccola Indi, ma fino alla fine farò quello che posso per difendere la sua vita. E per difendere il diritto della sua mamma e del suo papà a fare tutto quello che possono per lei. pic.twitter.com/3qKghAi1Uh
— Giorgia Meloni (@GiorgiaMeloni) November 6, 2023
குட்டிக் குழந்தை இண்டி பிழைக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று கூறுகிறார்கள். ஆனாலும், அவளுடைய உயிரைக் காப்பாற்ற கடைசி வரை என்னாலான முயற்சிகளைச் செய்வேன், அவளுடைய பெற்றோர் அவளுக்காக என்னென்ன செய்ய விரும்புகிறார்களோ, அதற்கும் உதவியாக இருப்பேன் என்று கூறியுள்ளார், இத்தாலி பிரதமரான Giorgia Meloni.
மற்றொரு அமைச்சரான Galeazzo Bignami என்பவரும், இத்தாலி அரசின் இந்த நடவடிக்கை, குழந்தை இண்டியை பிரித்தானியாவிலிருந்து Bambino Gesu மருத்துவமனைக்குக் கொண்டுவர அனுமதிக்கக்கூடும் என்றும், இல்லையென்றால், நேற்றே அவளுடைய செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இன்று பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று முடிவு செய்ய உள்ளது.