உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டதை நிரூபித்தால் மட்டுமே புகலிடம் வழங்கும் சுவிட்சர்லாந்து மீது கடுமையான விமர்சனம்
புகலிடம் கோரி வருபவர்கள், தாங்கள் தங்கள் நாட்டில் உள்நாட்டு யுத்தத்தால் தனிப்பட்ட விதத்தில் துன்புறுத்தப்படுகிறோம் என்பதை நிரூபித்தால் மட்டுமே புகலிடம் வழங்குவதாக சுவிட்சர்லாந்து கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
அகதிகள் என்பதற்கான சுவிட்சர்லாந்தின் வரையறை, மிகவும் மட்டுப்படுத்தும் வகையிலானது என்று கூறியுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையரான Anja Klug, அதனால் சிலதரப்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாக விடப்படுவதாகவும் கூறியுள்ளார்.
1951ஆம் ஆண்டின், அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை உருவாக்கப்பட்டதின் 70ஆவது ஆண்டை நினைவுகூறும் வகையில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டில், உள்நாட்டு யுத்தம் நடக்கும்போது, ஒரு கூட்டம் மக்கள், எதிரணியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, அல்லது எதிரணியைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகம் காரணமாக துன்புறுத்தப்படும்போது, அவர்கள், தங்கள் நாட்டில் உள்நாட்டு யுத்தத்தால் தனிப்பட்ட விதத்தில் துன்புறுத்தப்படுகிறோம் என்பதை நிரூபிப்பது கடினம் என்கிறது அந்த அறிக்கை.
உதாரணமாக, சிரியாவில் ஒரு குடும்பத்தினர் வாழும் வீட்டின்மீது, அங்கு எதிரிகள் இருப்பதாக சந்தேகத்தின்பேரில் குண்டு வீசப்பட்டுள்ளது. ஆனால், இது தனிப்பட்ட விதத்தில் குறிவைத்து துன்புறுத்தப்படுதல் என்பதற்கான ஆதாரமாக கருதப்படாததால், அந்த குடும்பத்தினருக்கு சுவிட்சர்லாந்தில் தற்காலிக அனுமதி மட்டுமே (F permit) வழங்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இதுபோல தற்காலிக அனுமதி பெறுவோர், அகதிகள் என்ற நிலையிலிருப்போர் (B permits) அனுபவிக்கும் அதே பலன்களை அனுபவிக்கமுடியாது.
அத்தகையோர் பல தடைகளை, குறிப்பாக வேலை தேடும்போது பல தடைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு சுவிட்சர்லாந்து நாட்டவர்களுடன் ஒருங்கிணைந்து வாழும் வாய்ப்பும் கிடைப்பதில்லை என்கிறார் Anja Klug.
சுவிட்சர்லாந்தில், தற்காலிக அனுமதி மட்டுமே பெற்றுள்ளவர்கள் சுமார் 50,000 பேர் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.