அகதிகளுக்குள் பாரபட்சம்... சுவிஸ் அரசு மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனம்
சுவிட்சர்லாந்து உக்ரைன் அகதிகள் விடயத்தில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.
அதாவது, மற்ற அகதிகளை விட உக்ரைன் அகதிகளுக்கு குறைவான நிதியுதவி அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து, உக்ரைன் அகதிகள் விரைவாக நாட்டுக்குள் வரவும், அவர்கள் சுவிட்சர்லாந்தில் பணி செய்ய உதவும் வகையில் S விசா அளிக்கவும் செய்வது பாராட்டுக்குரிய விடயம்தான். ஆனால், வழக்கமாக சுவிட்சர்லாந்து வரும் அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியில் பாதிக்கும் குறைவான தொகையே உக்ரைன் அகதிகளுக்கு அளிக்கப்படுகிறது.
உதாரணமாக இரண்டு பிள்ளைகளை உடைய உக்ரைன் தாய் ஒருவருக்கு மாதம் ஒன்றிற்கு உணவு, சோப் முதலான பொருட்கள், உடை மற்றும் போக்குவரத்துக்காக 865 சுவிஸ் ஃப்ராங்குகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதுவே, அதே பெண், வழக்கமாக சுவிட்சர்லாந்துக்குள் வரும் அகதியாக வந்திருப்பாரானால், அவருக்கு 1,800 சுவிஸ் ஃப்ராங்குகள் வழங்கப்பட்டிருக்கும். அதாவது, இப்போது அவருக்கு கிடைக்கும் தொகையை விட இரண்டு மடங்குக்கும் அதிகம் அவர் பெற்றிருப்பார்.
இந்த பாரபட்சமான நடவடிக்கையை அரசியல்வாதிகள் பலர் விமர்சித்துள்ளார்கள். UDC/SVP கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Andreas Glarner, உக்ரைன் அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி சொற்பத் தொகையே என்று கூறியுள்ளார். அவர்கள் உண்மையான அகதிகள் என்றும், அவர்கள் நன்றாக நடத்தப்படவேண்டும் என்றும் கூறியுள்ள அவர், அந்த தொகை அதிகரிக்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.