இந்திய வம்சாவளியினரை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இன ரீதியாக விமர்சித்த விவகாரம்... நடவடிக்கை துவங்கியது
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இந்திய வம்சாவளியினர் ஒருவரை இனரீதியாக விமர்சித்ததாகவும், அவரது மனைவியை பைத்தியம் என்று கூறியதாகவும் எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவர் பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Michelle Mone (50), ஒரு அரசியல்வாதி மட்டுமின்றி, ஒரு தொழிலதிபரும் கூட.உள்ளாடை நிறுவனம் ஒன்றைத் துவங்கி வெற்றிகரமாக நடத்திவந்ததால், அவர் ’உள்ளாடை கோமகள்’ என்றே அழைக்கப்படுகிறார்.
2019ஆம் ஆண்டு இரண்டு சொகுசுப் படகுகளில், இரு குழுவினர் மொனாக்கோ நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதில் ஒன்று Michelleக்கு சொந்தமானது. அப்போது Michelleஇன் படகு மீது, உடன் வந்த படகு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விபத்தில் Michelleஇன் படகில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனால், விபத்தை ஏற்படுத்திய படகில் பயணித்த Richard Lynton-Jones என்னும் இந்திய வம்சாவளியினரை இனரீதியாக Michelle விமர்சித்துள்ளார். அவரை 'waste of a man's white skin' என்றும், அவரது மனைவியை பைத்தியம் என்றும் விமர்சித்துள்ளார் Michelle.
அதற்கான ஆதாரங்களுடன், அதாவது Michelle அனுப்பிய குறுஞ்செய்திகளை ஆதாரமாகக் காட்டி, தன்னை அவர் இனரீதியாக விமர்சித்ததாக Richard சட்ட ரீதியாக நடவடிக்கையைத் துவக்கினார்.
அதைத் தொடர்ந்து, Michelleஐ பொலிசார் விசாரணைக்குட்படுத்த உள்ளனர். பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக The Sun பத்திரிகை தெரிவித்துள்ளது.