மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து ரஷ்யாவை விமர்சித்த ஜேர்மனி... இன்று தடுப்பூசிக்காக ரஷ்யாவை நாடும் நிலை
ஜேர்மனியின் தடுப்பூசி பற்றாக்குறை பிரச்சினை, ஜேர்மனியால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ரஷ்யாவிடமே உதவிகோரும் ஓர் நிலைமையை உருவாக்கிவிட்டது.
ரஷ்யாவில் எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவரான Alexei Navalny என்பவருக்கு நோவிச்சோக் என்னும் நச்சுப்பொருள் கொடுக்கப்பட்டதை உறுதி செய்த ஜேர்மனி, மற்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து அவருக்கு விஷம் கொடுத்ததின் பின்னணியில் ரஷ்ய அரசாங்கம் இருப்பதாக குற்றம் சாட்டியது.
இதற்கிடையில், மேற்கத்திய நாடுகளில் முதலில் ஒப்புதல் பெற்ற BioNTech நிறுவனத்தின் தடுப்பூசி தயாரிப்பே ஜேர்மனியில் நடைபெறும் நிலையில், போதுமான தடுப்பு மருந்து ஜேர்மனிக்கு கிடைக்காததால் ஜேர்மன் மக்கள் கோபமடைந்துள்ளனர்.
ஆகவே, வேறு வழியில்லாமல் ஜேர்மனி தான் கடுமையாக விமர்சித்த ரஷ்யாவின் உதவியையே தடுப்பூசிக்காக நாடவேண்டிய ஒரு நிலைமைக்கு ஆளாகியுள்ளது.
ஐரோப்பிய மருந்துகள் ஏஜன்சியின் ஒப்புதல் பெற்ற எந்த தடுப்பூசியையும் வரவேற்பதாக தெரிவித்துள்ள ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல், தான் ஏற்கனவே ரஷ்ய அதிபர் புடினுடன் அவர்களது தடுப்பூசி தயாரிப்பில் தாங்களும் உதவுவது குறித்து பேசிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahnம், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை ஜேர்மனியில் அல்லது ஐரோப்பாவில் எங்காவது தயாரிப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை உறுதி செய்துள்ளார்.
