பிரித்தானியா செல்லும் வழியில்... இரண்டாக பிளந்த படகு: பிரான்சில் பெருந்துயரம்
புலம்பெயர் மக்களுடன் பிரித்தானியாவுக்கு செல்லும் வழியில் படகு ஒன்று இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளான நிலையில், பலர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டசின் கணக்கான மக்கள்
முதற்கட்டமாக வெளியான தகவலில், 12 பேர் மரணமடைந்துள்ளதாகவும், இருவர் மாயமாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. குறித்த படகில் டசின் கணக்கான மக்கள் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Gérald Darmanin தெரிவிக்கையில், குறித்த விபத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என்றும், இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, BFMTV செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், விபத்துக்குள்ளான படகில் 65 பேர்கள் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கலேஸ் பகுதிக்கு தென்மேற்கே 28 மைல்கள் தொலைவில் விபத்து நடந்துள்ளது என்றே பிரெஞ்சு கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
மாயமானவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தர்மானின் தெரிவித்துள்ளார். மேலும், மிக மோசமான படகு விபத்து என குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் 12 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாயமானவர்களை தேடும் நடவடிக்கையில் அனைத்து அரசு அமைப்புகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களை உரிய முறையில் கவனிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
10 சிறு படகுகளில் 600 பேர்கள்
செவ்வாய்க்கிழமை பகல் சுமார் 11.30 மணி முதல் பிரெஞ்சு அவசர சேவைகள் பிரிவு களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2000 மக்கள் பிரித்தானியாவில் புகலிடம் கோரி சிறு படகுகளில் பயணித்து கரை சேர்ந்துள்ளனர்.
ஆகஸ்டு 28ம் திகதி மட்டும் 10 சிறு படகுகளில் 600 பேர்கள் பிரித்தானியாவில் நுழைந்துள்ளனர். செப்டம்பர் 2ம் திகதி 6 படகுகளில் 351 பேர்கள் பிரித்தானியாவில் நுழைந்துள்ளனர்.
ஆகஸ்டு 11ம் திகதி நடந்த விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், இன்னொரு 50 பேர்கள் மீட்கப்பட்டனர். ஜூலை 19ம் திகதி நடந்த படகு விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் பலர் மீட்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |