மவுனி அமாவாசையால் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்.., புனித நீராட மக்கள் குவிந்ததால் உயிரிழப்பு அச்சம்
இன்று மவுனி அமாவாசை என்பதால் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்கு பக்தர்கள் திரண்டு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மவுனி அமாவாசை என்பதால் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்கு பக்தர்கள் திரண்டு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில், பலரும் காயம் அடைந்துள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கும்ப மேளாவில் சிறப்பு அதிகாரியாக பணியில் உள்ள அகன்க்ஷா ராணா கூறுகையில், "புனித நீராடும் சங்கம் காட் பகுதிக்கு அருகே இருந்த தடுப்பு கட்டை உடைந்தது. இதனால், பல பக்தர்கள் காயமடைந்தனர்.
அவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்" என்றார். இதில், சம்பவம் நடந்த பகுதியில் பக்தர்கள் புனித நீராட தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
வட இந்தியாவில் மக மாதத்தில் வரும் அமாவாசையை, மவுனி அமாவாசை என்று அழைப்பார்கள். இதனால் இன்று மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி உடனடியாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |