ஜேர்மனிக்காக கதறிய சிறுமி... குவிந்த பெரும் நிதி: இறுதியில் அவர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு
இங்கிலாந்து கால்பந்து அணியுடன் தங்கள் நாடு வெற்றி வாய்ப்பை இழந்ததால் கதறி அழுத ஜேர்மானிய சிறுமிக்காக திரட்டப்பட்ட தொகையை, அவர் கேட்டுக்கொண்டதால் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது.
யூரோ கிண்ணம் கால்பந்து தொடரில் ஜேர்மனி அணி லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்ட ஆட்டத்தில் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.
இது ரசிகர்கள் மத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்த 9 வயது ஜேர்மானிய சிறுமி ஒருவர் தாங்க முடியாமல் கதறி அழுதது, ஊடகங்களில் பலரது கவனத்தை ஈர்த்தது.
அத்துடன், பிரித்தானிய ரசிகர்கள் சிலரால், மிக மோசமான கிண்டலுக்கும் கேலிக்கும் இலக்கானது அந்த ஒற்றை நிகழ்வு.
இதனையடுத்து பிரித்தானியர் ஒருவர், அந்த சிறுமியை தேற்றும் வகையில் 500 பவுண்டுகள் திரட்டி, சிறுமிக்கு பரிசளிக்க விருபினார். இதற்காக பொதுமக்களிடம் கோரிக்கையும் வைத்தார்.
ஆனால் தற்போது அந்த தொகை 36,000 பவுண்டுகள் என அதிகரித்துள்ளது. மேலும், பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு அந்த சிறுமியின் குடும்பத்தை கண்டு பிடித்ததுடன், அந்த தொகையை அவர்களுக்கு அளிக்க முன்வந்துள்ளனர்.
ஆனால், அனைவரது ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ள அந்த குடும்பம், சிறுமியின் நெகிழ வைக்கும் முடிவையும் அறிவித்துள்ளது.
சிறுமியின் பெயரில் இதுவரை திரட்டப்பட்ட மொத்த 36,000 பவுண்டுகள் தொகையையும் சிறார்களுக்காக இயங்கும் UNICEF அமைப்புக்கு அளிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, உரிய முறைப்படி, அந்த தொகை UNICEF அமைப்புக்கு வழங்கப்பட உள்ளது.