ரூ 59,900 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி கொள்ளை: உலகின் மிகப்பெரிய கிரிப்டோ நிறுவனத்தில் கைவரிசை
Binance says crypto worth $6.3bn impacted: 6.3 பில்லியன் டொலர் மதிப்புள்ள கிரிப்டோ பாதிக்கப்பட்டுள்ளதாக பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி நிறுவனமான பைனான்ஸ், தனது தளத்தில் ஏற்பட்ட ஒரு பாதுகாப்புச் சம்பவத்தால் சுமார் 6.3 பில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்களை இழந்துள்ளது.
பொறியாளரின் மடிக்கணினி
மற்ற தளங்களின் உதவியுடன் அந்தச் சொத்துக்களில் சுமார் பாதி முடக்கப்பட்டுள்ளதாகவும், நிறுவனம் அனைத்து இழப்புகளையும் ஈடுசெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

சந்தேகிக்கப்படும் இந்தக் கொள்ளையில், ஒரு பொறியாளரின் மடிக்கணினி சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும், அதன் மூலம் தாக்குதல் நடத்தியவர் அங்கீகரிக்கப்படாத முறையில் பணத்தை எடுத்திருக்கலாம் என்றும் ஆரம்பகட்ட சோதனைகள் காட்டுவதாக பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஆசிய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சந்தைகள் உடனடியாக எதிர்வினையாற்றின. பிட்காயின் 3 சதவீதத்திற்கும் மேல் சரிந்து, ஆறு வாரங்களில் இல்லாத குறைந்தபட்ச விலையான 76,368 டொலரை எட்டியது.
மேலும், ஈதர் 3 சதவீதத்திற்கும் மேல் சரிந்து, இரண்டு மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச விலையான 2,178 டொலரை அடைந்தது. பைனான்ஸ் கட்டணங்களைச் செலுத்தப் பயன்படும், முதலில் பைனான்ஸ் காயின் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட டோக்கனான BNB, கடந்த 24 மணி நேரத்தில் 5 சதவீதம் சரிந்து 709.70 டொலராக உள்ளது.
அமெரிக்காவில் நீட்டிக்கப்பட்ட வர்த்தகத்தில், கிரிப்டோ பரிவர்த்தனை நிறுவனமான காயின்பேஸ் குளோபல் (Coinbase Global) நிறுவனத்தின் பங்குகள் 4.8 சதவீதம் சரிந்தன, அதே நேரத்தில் பிட்காயின் வாங்குபவரான ஸ்ட்ராடஜி (Strategy) நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.
செயின் அனாலிசிஸ் என்ற பகுப்பாய்வு நிறுவனம் மற்றும் பிற துறை வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் உலகின் மிகப்பெரிய கிரிப்டோ கொள்ளையாக இருக்கலாம் என்றே குறிப்பிடுகின்றனர்.
உலகளவில் 335 மில்லியன்
2025ல் இன்னொரு கிரிப்டோ நிறுவனமான பைபிட் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 1.5 பில்லியன் டொலர் மதிப்பிலான கிரிப்டோ கொள்ளையிடப்பட்டது. குறித்த சம்பவம் வட கொரிய தரப்பில் இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவே கூறுகின்றனர்.

பயனர்களை டிஜிட்டல் சொத்துக்களை வாங்க, விற்க மற்றும் வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் பைனான்ஸ், உலகளவில் 335 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது.
மேலும், இந்த நிறுவனத்தின் 2025 ஆண்டு அறிக்கையின்படி, சுமார் 162.8 பில்லியன் டொலர் மதிப்புள்ள கிரிப்டோ அதன் பாதுகாப்பில் இருந்தன.
தற்போது பைனான்ஸ் நிறுவனம் சுமார் 6.3 பில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்களை இழந்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ 59,948 கோடி என்றே தெரிய வருகிறது.