வேறு அணிக்கு சென்றதால் டூபிளசியை மறந்த சென்னை அணி - கோபமான ரசிகர்கள்
ஐபிஎல் அணிகளில் ஒன்றான சென்னை அணி நேற்றைய தினம் போன ட்விட்டர் பதிவு ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த்து.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தின் முடிவில் சுமார் 204 வீரர்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக ரூ.551 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னை அணியில் ஏற்கனவே விளையாடிய ஃபாப் டூபிளசிஸ் பெங்களூரு அணிக்கும், ஷர்துல் தாகூர் டெல்லி அணிக்கும் சென்றது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இரு வீரர்களும் சென்னை அணியுடனான தங்களது பயணம் குறித்து வீடியோ வெளியிட்டு நெகிழ வைத்தனர்.
இந்நிலையில் பங்களாதேஷில் தற்போது நடைபெற்று வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இதில் இறுதிப்போட்டியில் மோதிய Comilla Victorians அணியில் ஃபாப் டூபிளசிஸ் மற்றும் மொயீன் அலி ஆகிய வீரர்களும், Fortune Barishal அணியில் பிராவோவும் ஆடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற ஃபைனலில் Comilla Victorians அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இந்த போட்டிக்கு முன்பாக சென்னை அணி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே அணி வீரர்களான மொயீன் அலி மற்றும் பிராவோ ஆகியோரை குறிப்பிட்டு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தது. இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை பெற தொடங்கிய நிலையில், இதே போட்டியில் விளையாடும் முன்னாள் சென்னை அணி வீரர் டூபிளசிஸ் தன்னை குறிப்பிடாதது பற்றி கமெண்ட் செய்தார்.
அடுத்த சில மணி நேரத்தில் பிராவோ, மொயீன் அலி மற்றும் டூபிளசிஸ் ஆகிய மூன்று பேரையும் இணைத்து வீடியோ ஒன்றைச் வெளியிட்ட் மூவருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்த்துக்களைத் தெரிவித்தது. இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.