மிரள வைத்த சாகர்... முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்
பஞாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் சென்னைக்கும் பஞ்சாபிற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடந்தது.
முதல் போட்டியில் தோல்வி அடைந்த சென்னை இன்று எப்படியாவது வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற திட்டத்தில் களமிறங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்தது. பஞ்சாப் அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார்.
அதன்பின் ராகுல் ரன் அவுட் செய்யப்பட்டார். தொடர்ந்து கெயில்(10), தீபக் ஹூடா(10) ஓட்டங்கள் எடுத்து ஏமாற்றமளித்தனர். நிக்கோலஸ் பூரான் டக் அவுட் ஆனார்.
தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் மட்டும் அதிரடியாக ஆடினார். 36 பந்தில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி என்று 47 ஓட்டங்கள் எடுத்து ஷாருக்கான் அவுட் ஆனார்.
சென்னை அணியில் அதிரடியாக பந்து வீசிய சாகர் 4 விக்கெட் எடுத்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து 107 ஓட்டங்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் ரூத்துராஜ், டு பிளசிஸ் நிதானமாக ஆடினார்கள்.
ரூத்துராஜ் 16 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். ஆனால் அதன்பின் இறங்கிய மொயின் அலி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார்.
இரண்டாவது பந்தில் இருந்தே பவுண்டரி அடித்தவர் சரியான இடைவெளியில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஸ்வின் பந்து வீச்சில், 31 பந்தில் 46 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மொயின் அலி அவுட் ஆனார்.
இதன் பிறகு களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, சாம் கர்ரன், டு பிளசிஸ் இணை தொடர்ந்து விளையாடி இலக்கை எட்டினர்.
இதனால் சென்னை அணி 15.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 107 ஓட்டங்கள் எடுத்து 2021 ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.