கனடாவில் கஞ்சா கலந்து கேக் செய்து சக வீரர்களுக்கு கொடுத்த இராணுவ வீராங்கனை: நீதிமன்றம் அதிரடி
கனடாவில், துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருந்த இராணுவ வீரர்களுக்கு கஞ்சா கலந்த கேக் தயாரித்து வழங்கியதாக இராணுவ வீராங்கனை ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
New Brunswickஐச் சேர்ந்த இராணுவ வீராங்கனையான Chelsea Cogswell, இராணுவ கேன்டீனுக்கு பொறுப்பாளராக இருந்திருக்கிறார். ஒருநாள், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு கேக் தயாரித்துக் கொடுத்திருக்கிறார் Chelsea.
கேக்கை சாப்பிட்ட வீரர்கள் தலைசுற்றல், மயக்கம், கவலை முதல் பல்வேறு மனப் போராட்டங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். பலர் தங்களால் இலக்கை குறிவைத்து சுட இயலவில்லை என்றும், தங்களால் பாதுகாப்பாக ஆயுதங்களைக் கையாள முடியுமா என்ற அச்சம் தங்களுக்கு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
அவர்களது சிறுநீரை பரிசோதித்ததில், அவர்களுக்கு கஞ்சா கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் சாப்பிட்ட கப் கேக்கின் உறையில் கஞ்சா இருப்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மருத்துவர் பரிந்துரைப்படி மருத்துவ காரணங்களுக்காக கஞ்சா வாங்க Chelseaவுக்கு அனுமதியும் இருக்கிறது.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை Chelsea மறுத்துள்ளார்.
என்றாலும், Chelseaதான் கேக்கில் வேண்டுமென்றே கஞ்சாவை கலந்ததாக தான் சந்தேகமேயின்றி நம்புவதாக தெரிவித்துள்ளார் விசாரணை அதிகாரி.
ஏற்கனவே, Chelseaவுக்கும் சம்பந்தப்பட்ட வீரர்களுக்கும் பிரச்சினை இருந்திருக்கிறது. அவரை வீரர்கள் கெட்ட வார்த்தையால் விமர்சிப்பதுண்டு என்பதும் தெரியவந்துள்ள நிலையில், Chelseaதான் வேண்டுமென்றே கேக்கில் கஞ்சாவைக் கலந்ததாக குற்றச்சாட்டு உறுதி செய்யபட்டுள்ளது.
Chelsea மீது மொத்தம் 10 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அவருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.