இலங்கையில் பத்திரிக்கைகள் மூடப்படும் அபாயம்
இலங்கையில் பரவிய கோவிட் பெருந்தொற்று காரணமாக, நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள இந்த தருணத்தில் செய்தித் தாள்களை அச்சிடும் கடதாசிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஊடகத் தொழில் நலிவடையும் என்பதையும் கடந்து, தொலைக்காட்சி, இணையதளம் போன்ற வசதிகள் இல்லாத பின் தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள் நாட்டு நடப்பு என்ன என்பதை அறிவதற்கான வாய்ப்புகளும் பறிபோகும் என்ற அச்சம் உண்டாகியுள்ளது.
ஆனால், ஊடக நிறுவனங்கள் இத்தகைய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளதை இதுவரை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.
கொரோனா தொற்று, உணவுப் பொருள் பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு நெருக்கடிகளை இலங்கை ஒரு சேர சந்தித்து வரும் சூழலில், அவை குறித்த அரசின் அறிவிப்புகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த செய்திகள் இலங்கையின் கடைசி கிராமம் வரை சென்று சேர்வதும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அச்சுப் பத்திரிகையை மட்டுமே நம்பி, தகவல் அறிந்துக்கொள்ளும் கொழும்பு - கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த சிவம் சண்முகராஜா பிபிசி தமிழிடம் தமது கவலையைப் பகிர்ந்துகொண்டார்.
''பேப்பரை நாளாந்தம் வாங்குவேன். வீட்டில் இருக்கும் போது, இடைக்கிடை வாசிப்பேன். எங்களுக்கு ஒன்லயின்ல எல்லாம் செய்தி பார்க்க தெரியாது. நாங்க வயசானவங்க தானே! ஒன்லயின்ல பார்க்கக்கூடிய அளவு எமக்கு சரியான தெளிவில்ல. பேப்பர்ல இருந்தா, நேரம் கிடைக்கும் போது, செய்திகள வாசிப்பேன். எங்களுக்கு பேப்பர மாதிரி எப்படியும் வராது. பேப்பர பார்த்து பழகியதால, வேறு ஒன்றுலயும் செய்தி பார்த்த புரியாது" என சிவம் சண்முகராஜா கூறினார்.
விலைகள் அதிகரிக்கும் அபாயம்
இலங்கையிலுள்ள பத்திரிகை நிறுவனங்கள், 3 மாத காலத்திற்கு தேவையான கடதாசிகளை களஞ்சியப்படுத்திய வைத்திருப்பது வழமையானது.
இலங்கையில் கோவிட் பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், பத்திரிகை அச்சிடும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டு, இலத்திரனியல் பத்திரிகைகளே வெளியிடப்பட்டன.
நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காலப் பகுதியில், கடதாசி இறக்குமதியும் செய்யாத நிலையில், பத்திரிகை நிறுவனங்கள் பழைய கடதாசிகளை வைத்தே தற்போது பத்திரிகைகளை அச்சிட்டு வெளியிட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், களஞ்சிய சாலையிலுள்ள கடதாசிகள் தொடர்ச்சியாக குறைவடைந்து வருகின்றமையினால், எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்கு அச்சிடக்கூடிய வகையிலான கடதாசிகள் மாத்திரமே எஞ்சியுள்ளன.
பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள், தமது பத்திரிகைகளின் பக்கங்களை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், விலைகளையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளன.
அரசாங்கத்தின் பதில்
பத்திரிகை நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னை குறித்து இன்று வரை தனது கவனத்திற்கு, எந்தவொரு நிறுவனமும் கொண்டு வரவில்லை என ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகபெரும, பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்த பிரச்னை தனது கவனத்திற்கு கொண்டு வரப்படும் பட்சத்தில், இது குறித்து தான் நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தி, தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் கூறினார்.