சுவிஸ் எல்லையில் காரில் பிள்ளை பெற்றெடுத்த பெண்: உதவிய சுங்க அதிகாரிகள்
சுவிட்சர்லாந்தில் இருந்து ஜேர்மனி செல்லும் வழியில், சுவிஸ் எல்லையில் பெண் ஒருவர் தமது காரிலேயே பிள்ளை பெற்றெடுத்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு தேவையான உதவிகளை ஜேர்மன் சுங்க அதிகாரிகளே மேற்கொண்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை சுமார் 3.30 மணியளவில் சுவிட்சர்லாந்தில் இருந்து ஜேர்மனி செல்லும் வழியில் பாஸல் பகுதியில் வைத்து, சுங்க அதிகாரிகளிடம் ஒருவர் உதவி கேட்டுள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியான தமது மனைவி மருத்துவ உதவி தேவைப்படும் சூழலில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஜேர்மன் சுங்க அதிகாரிகள் குறித்த வாகனத்தை சோதனையிட்ட நிலையில், பெண் ஒருவர் மயக்கமுற்ற நிலையிலும், அவர் அருகாமையில் அப்போது பிறந்த பிள்ளை ஒன்றை கைகளில் ஏந்தியபடி ஒருவர் இருந்துள்ளார்.
குழந்தை பாதிப்பு ஏதுமின்றி இருந்துள்ளது. ஆனால் தொப்புள் கொடி இன்னும் வெட்டப்படாமலே இருந்துள்ளது. இதனை கவனித்த ஜேர்மன் சுங்க அதிகாரி ஒருவர், உடனடியாக கிருமி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவ கத்தரிக்கோல் ஒன்றை வரவழைத்து, தொப்புள் கொடியை அப்புறப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து தாயாரையும் பிள்ளையையும் பத்திரமாக அழைத்து செல்லும் வகையில் சுங்க அதிகாரிகள் உதவியுள்ளனர்.
மட்டுமின்றி, அவசர மருத்துவ உதவி குழுவினரின் உதவியுடன் அருகாமையில் உள்ள ஜேர்மன் நகர மருத்துவமனையில் தாய் மற்றும் பிள்ளையை சேர்ப்பித்துள்ளனர்.