இணையமூடாக பொறி வைக்கும் இந்தியா... கனேடிய உளவுத்துறை எச்சரிக்கை
வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகளை சிக்க வைக்க இந்தியா சைபர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக கனேடிய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கை
வான்கூவரில் சீக்கிய ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டது உட்பட அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்களுக்கு இந்திய உயர் அதிகாரி ஒருவர் ஆதரவு அளித்து வருவதாக கனேடிய அரசாங்கம் வெளிப்படையாக பெயர் குறிப்பிட்டு குற்றம் சாட்டியதன் அடுத்த நாள், உளவுத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கனடாவின் CSE அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டில் வாழும் ஆர்வலர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களைக் கண்காணிக்கவும் கண்டறியவும் இந்தியா சைபர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
அத்துடன் கனேடிய அரசாங்க அமைப்புகளுக்கு எதிரான இணையத் தாக்குதல்களையும் முடுக்கிவிடுகிறது. இந்தியாவிற்கு வெளியே மிகப்பெரிய எண்ணிக்கையில் சீக்கிய சமூகம் கனடாவில் வாழ்கின்றனர்.
இதில் சீக்கியர்களுக்கு என தனியாக மாகாணம் ஒன்றைக் கோரும் ஆர்வலர்களும் உள்ளனர். கடந்த 2023ல் வான்கூவரில் 45 வயதான கனேடிய குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலையை இந்தியா திட்டமிட்டதாக கனடா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கொல்லும் சதித்திட்டத்தில்
இந்த நிலையிலேயே CSE அமைப்பின் தலைவர் Caroline Xavier பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், இந்தியா சைபர் அச்சுறுத்தலில் வளர்ந்து வருவது தெளிவாகிறது என்றும், இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதே இதுபோன்ற சைபர் அச்சுறுத்தல் அதிகரிக்க காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கனேடிய காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைத்து மிக தீவிரமாக சைபர் தாக்குதல் முன்னெடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
கனேடிய சீக்கியர்களை மிரட்டுவது அல்லது கொல்லும் சதித்திட்டத்தில் இந்திய உள்விவகார அமைச்சர் அமித் ஷா சம்பந்தப்பட்டிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தியை கனேடிய வெளிவிவகார துணை அமைச்சர் டேவிட் மோரிசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
2023ல் நிஜ்ஜார் கொல்லப்பட்டது உட்பட உளவு சேகரிப்பு மற்றும் தாக்குதல் பிரச்சாரத்தை அமித் ஷா அங்கீகரித்ததாக பெயர் குறிப்பிடாத மூத்த கனேடிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |