நாளை கரையை கடக்கும் அர்னாப் புயல்- இந்திய வானிலை மையம்
ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் நாளை முற்பகல் அர்னாப் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இந்திய வானிலை மையம் கூறுகையில்..,
மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக மாறியது.
இந்த புயலுக்கு, அர்னாப் என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி.மீ வேகத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது.
புயலானது ஒடிஷா மாநிலம் கோபால்பூரில் இருந்து, கிழக்கு - தென்கிழக்கே 380 கி.மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கு - தென்கிழக்கே 260 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று நள்ளிரவு 11:30 மணியளவில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுவடைந்தது.

இன்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையிலும், அதன்பிறகு வடமேற்கு திசையிலும் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை முற்பகல், இது மிகத் தீவிர சூறாவளி புயலாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 140 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
விசாகப்பட்டினத்தில் உள்ள வானிலை ரேடார் மூலம் புயல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடலோர ஆந்திரா, ஒடிஷா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு, அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை முதல், அதி கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |