இலங்கை முழுவதும் கனமழை எச்சரிக்கை - சூறையாடும் பெங்கல் புயல்
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “பெங்கல்” சூறாவளியானது திருகோணமலைக்கு வடக்கே 360 கிமீ தொலைவிலும் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கிமீ தொலைவிலும் நவம்பர் 29, 2024 இரவு 11.30 மணிக்கு நிலைகொண்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30 ஆம் திகதி பிற்பகலில் புயலாக வட தமிழ்நாடு-புதுச்சேரி கரையை கடக்க வாய்ப்புள்ளது.
இலங்கையின் காலநிலையில் இந்த அமைப்பின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதாக வானிலைத் துறை தெரிவித்துள்ளது.
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
மேல், வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.
மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிவுறுத்தல் தெரிவிக்கிறது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |