சர்வாதிகாரி ஸ்டாலின் ஒழிக! சிறையிலிருந்து வெளியே வந்ததும் கொதித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
புழல் சிறையில் இருந்து தமிழக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 19ஆம் திகதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தினத்தன்று திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி கும்பல் வன்முறை செய்ததாக பிப்ரவரி 21 இரவு ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
இதோடு நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளும் ஜெயக்குமார் மீது போடப்பட்ட நிலையில் 20 நாட்களாக புழல் சிறையில் இருந்தார். இந்நிலையில் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதனையடுத்து இன்று சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார். விடுதலையான ஜெயக்குமாருக்கு சிறை வாசலிலும், வீட்டிலும் திரளான அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜாமீனில் வெளிவந்தார் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ??@offiofDJ pic.twitter.com/SfreMZr0Ef
— வெள்ளாளபுரம் ரவிக்குமார் (@VellalapuramR) March 12, 2022
டிஜே வாழ்க டிஜே வாழ்க என்று அவர்கள் முழக்கங்கள் எழுப்பிய நிலையில் ஒரு கட்டத்தில் ஜெயக்குமாரை அலேக்காக தூக்கி தோள்களில் வைத்துக்கொண்டனர்.
தொண்டர்களின் ஆவேசத்தை பார்த்து தானும் உணர்ச்சிவசப்பட்ட ஜெயக்குமார் ஒலிபெருக்கியை வாங்கி, 'அராஜக ஸ்டாலின் ஒழிக', 'சர்வாதிகாரி ஸ்டாலின் ஒழிக' 'புரட்சித்தலைவி அம்மா வாழ்க' 'அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வாழ்க' என்ற முழக்கங்களை எழுப்பினார்.
பின்னர் ஜெயக்குமார் கூறுகையில், ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டும்; சகிப்புத் தன்மை இல்லாத திமுக அரசு. 9 மாத கால ஆட்சியில் எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஹிட்லரின் மறு உருவமாக இருக்கிறார்.
தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்றாமல் எதிர்க்கட்சியான அதிமுக வின் முன்னாள் அமைச்சர்களை, தலைமை கழக நிர்வாகிகளை, மாவட்டச் செயலாளர்களை பழி வாங்குவதில் தான் அவர் குறியாக இருக்கிறார்.