பிரபலமான உணவு சாப்பிட்டு ஆண்டுகளாக வாயு பிரிதலால் அவதிப்பட்ட பிரித்தானியர்: பெருந்தொகை கேட்டு வழக்கு
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துமஸ் சந்தையில் ஹாம் ரோல் சாப்பிட்டதில் இருந்து வாயு பிரிததால் அவதிப்பட்டு வருவதாக கூறி பிரித்தானியர் ஒருவர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2017ல் பிர்மிங்ஹாமில் அமைந்திருந்த பிராங்பேர்ட் கிறிஸ்துமஸ் சந்தையில் குடும்பத்துடன் சென்றிருந்த Tyrone Prades ஹாம் ரோல் சாப்பிட்டுள்ளார்.
அதன் பிறகு தமது வாழ்க்கையே தலைகீழாக மாறியதாக கூறியுள்ளார் Tyrone Prades. தற்போது தொடர்புடைய உணவகம் மீது 200,000 பவுண்டுகள் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
46 வயதான அவர் அந்த ஒரே நாளில் கடுமையான வயிற்றுப் பிரச்சினைகளால் அவதிப்பட்டதாகவும், ஐந்து வாரங்கள் படுக்கையில் இருந்ததாகவும், பல மாதங்கள் நோய்வாய்ப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் வாயு பிரிதல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாகவும், வற்றில் இருந்து குமட்டலை ஏற்படுத்தும் சத்தம் வந்தவண்ணம் உள்ளதாகவும், இதனால் தூக்கம் தொலைந்து போயுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் சாப்பிட்ட ஹாம் ரோலில் சால்மோனெல்லா பாக்டீரியா பாதிப்பு இருந்திருக்கலாம் எனவும், இதனால் பிராங்பேர்ட் கிறிஸ்துமஸ் சந்தை நிறுவனம் தமக்கு இழப்பீடாக 200,000 பவுண்டுகள் அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் குறித்த நிறுவனம் இவரது குற்றச்சாட்டுகளை மொத்தமாக நிராகரித்துள்ளதுடன் தாங்கள் விநியோகம் செய்துள்ள ஹாம் ரோல் உணவில் சால்மோனெல்லா பாக்டீரியாவுக்கான வாய்ப்பே இல்லை எனவும் மறுத்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகாரில் Tyrone Prades தமது நிலை குறித்து விளக்கமளித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் சந்தையில் ஹாம் ரோல் சாப்பிட்ட 24 மணி நேரத்திற்குள் உடல்நிலை சரியில்லாமல் போனதுடன், வயிற்றுப் பிடிப்பு, காய்ச்சல், குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவர் அவதிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த சிக்கல்களில் இருந்து மெல்ல மீண்டுவர இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும், ஆனால் தொடர்ந்து மந்தமாக உணர்ந்ததாகவும் வயிற்றுப்போக்கு உட்பட இதே போன்ற சிக்கல்களால் அவதிப்பட்டதாகவும் அவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மூன்று குழுக்களில் மொத்தம் 16 பேர் கிறிஸ்துமஸ் சந்தையில் தொடர்புடைய ஸ்டாலில் சாப்பிட்ட பிறகு இதே போன்ற அறிகுறிகளைப் புகார் செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே பொது சுகாதாரத்துறை முன்னெடுத்த விசாரணையில், 2017ல் பிராங்பேர்ட் கிறிஸ்துமஸ் சந்தையில் சாப்பிட்ட இருவருக்கு சால்மோனெல்லா பாக்டீரியா பாதிப்பை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.