வெளிநாட்டு விமான நிலையத்தில் இரண்டு வாரமாக சிக்கிக்கொண்ட நபர்: பிரித்தானியர் என நிரூபிக்க போராட்டம்
சட்டப்பூர்வ ஆவணத்தை தொலைத்து, பாரிஸ் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட நபர் தாம் பிரித்தானிய குடிமகன் என நிரூபிக்க போராடிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியை சேர்ந்த கருப்பினத்தவரான அப்துல் ஜோப் என்பவரே பாரிஸ் Charles de Gaulle விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டவர்.
பிரித்தானியர் என்பதை நிரூபிக்க அவரிடம் ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால், விமான நிலைய நிர்வாகம் அவரை வெளியேறவும் அனுமதிக்கவில்லை. இதனால் கழிவறை குழாய் நீரை பசி போக்க குடிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
எப்போதவாது சாப்பிடவும், பயணிகளுக்கான இருக்கையில் இரவு தூங்கவும் செய்துள்ளார். காம்பியாவில் இருந்து பிரான்ஸ் திரும்பும் முன்னதாக ஜோப் தனது பயோமெட்ரிக் குடியிருப்பு அட்டையை தொலைத்துள்ளார்.
காம்பியாவில் குடும்பத்தினரை சந்திக்கவும் விடுமுறையை கழிக்கவும் சென்றுள்ளார் ஜோப். காம்பியாவில் இருந்து பாரிஸ் வழியாக பிரித்தானியா திரும்பும் நிலையிலேயே இந்த இக்கட்டான சூழலில் ஜோப் சிக்கியுள்ளார்.
பிரித்தானியாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றிவரும் ஜோப், தமது ஆவணங்களை பிரித்தானியாவில் இருந்து பாரிஸ் விமான நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் வரையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தமது மகனின் 12வது பிறந்தநாளையும் ஜோப் தவறவிட்டுள்ளார். திடீரென்று விமான நிலையத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டதால், கைவசம் இருந்த பணமும் போதுமானதாக இல்லை என்பதால், கடைசியில் குழாய் தண்ணீரில் பசி போக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுமார் 14 நாட்கள் குளிக்காமல், பல் துலக்காமல் கடும் அவஸ்தைக்கு உள்ளானதாக கூறும் ஜோப், இந்த காரணங்களால் உதவி கேட்டு எவரையும் நெருங்க முடியாமல் போனது என்றார்.
இரண்டு வாரங்களுக்கு பின்னர், இறுதியாக பிரித்தானிய உள்விவகார அமைச்சகம் அனுமதி அளிக்க, ஜோப் நாடு திரும்பியுள்ளார்.