பிரித்தானியாவில் மூன்று வயது மகளுடன் மாயமான தந்தை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை
பிரித்தானியாவில் 11 நாட்களுக்கு முன்னர் மூன்று வயது மகளுடன் மாயமான தந்தை தொடர்பில் உதவ பொதுமக்கள் முன்வர வேண்டும் என பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எட்டு நாட்களுக்குப் பிறகு புகார்
லங்காஷயர் பகுதியில் இருந்து கடந்த 10ம் திகதி முதல் 36 வயதான அகமது கர்வான் அப்துல்லா மற்றும் அவரது 3 வயது மகள் துன்யா அப்துல்லா ஆகியோர் மாயமாகியுள்ளனர்.
Credit: Lancashire Police
அவர்கள் கடைசியாக பிளாக்பூலின் ப்ரோமனேட் பகுதியில் காணப்பட்டனர், ஆனால் எட்டு நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் காணாமல் போனதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மான்செஸ்டர் மற்றும் கென்ட் பகுதிகளில் இவர்களுக்கு உறவினர்கள் உள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, இவர்கள் இன்னும் பிளாக்பூலில் இருக்கலாம், அல்லது இன்னும் தொலைவில் பயணித்திருக்கலாம் எனவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.
இதுபோன்ற ஒரு சூழல் அந்த தந்தையும் மகளும் இதுவரை எதிர்கொண்டதில்லை என குறிப்பிட்டுள்ள பொலிசார், அவர்களின் நிலை தொடர்பில் கவலை தெரிவித்துள்ளனர்.
Credit: Lancashire Police
அந்த தந்தையும் மகளும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதை உறுதிசெய்ய, அவர்களை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனால், பொதுமக்கள் தங்களுக்கு தெரியவரும் தகவல்களை விசாரணை அதிகாரிகளுடன் விரைவாக பகிர்ந்துகொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.