மகாராணி போன்ற ஒருவரை இனி பார்க்கப்போவதில்லை! சார்லஸுக்கு நல்ல அதிர்ஷ்டம்.. ஜேம்ஸ் பாண்ட் நடிகர்
ராணியின் இறப்பு செய்தி அறிந்து பலரைப் போலவே நானும் மிகவும் வருத்தமடைந்தேன் - நடிகர் டேனியல் கிரேக்
ராணியுடன் இணைந்து நடித்த காட்சி வேடிக்கையாக இருக்கக் கூடாது, தீவிரமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன் - டேனியல் கிரேக்
மறைந்த பிரித்தானிய ராணி எலிசபெத்துடன் இணைந்து ஒரு காட்சியில் நடித்தது குறித்து ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரேக் பேசியுள்ளார்.
ஸ்கொட்லாந்தில் தனது 96வது வயதில் மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். அவர் 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவிற்காக எடுக்கப்பட்ட காட்சி ஒன்றில் நடித்திருந்தார்.
ஜேம்ஸ் பாண்ட் படத்தில் இடம்பெறுவது போல் அந்த காட்சி படமாக்கப்பட்டது. டேனியல் கிரேக் அப்போது மகாராணியுடன் இணைந்து நடித்தார். இந்த நிலையில் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் டேனியல் அளித்த பேட்டியில் மகாராணி எலிசபெத்துடன் இணைந்து நடித்தது குறித்து பேசிய அவர், ராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
LOCOG/AFP via Getty Images
டேனியல் கிரேக் கூறுகையில், 'என்ன ஒரு நம்ப முடியாத விடயம். அவரைப் போன்றவர்களை இனி ஒருபோதும் பார்க்க மாட்டோம். உயிரோடு இருக்கும்போது அவர் ஆட்சி செய்தது வேறு விடயம். நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். சார்லஸுக்கு நல்ல அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். அவருடன் இணைந்து நடித்த காட்சி வேடிக்கையாக இருக்கக் கூடாது, தீவிரமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். ஆனால் மகாராணி விளையாட்டுத்தனமாக இருந்தார்' என தெரிவித்தார்.
மேலும், ராணிக்கு அவர் இரங்கல் கூறியபோது, 'ராணியின் இறப்பு செய்தி அறிந்து பலரைப் போலவே நானும் மிகவும் வருத்தமடைந்தேன். எனது இரங்கலை அரச குடும்பத்தினர், ராணி நேசித்தவர்கள் மற்றும் அவரை நேசித்த அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒப்பற்ற பாரம்பரியத்தை விட்டுச் சென்றுவிட்டார், ஆழமாக அவர் இழக்கப்படுவார்' என தெரிவித்தார்.
PA