குஜராத்தை வீழ்த்திய திருப்புமுனை ஓவர்.. துல்லியமாக வீசியது இப்படி தான்: டேனியல் சாம்ஸ்
கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது குறித்து டேனியல் சாம்ஸ் பேசியுள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. 178 ஓட்டங்கள் இலக்கை நோக்கி குஜராத் அணி ஆடிக்கொண்டிருந்தபோது கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அதிரடி வீரர் டேவிட் மில்லர் மற்றும் ரஷித் கான் களத்தில் இருந்தனர். அந்த ஓவரை டேனியல் சாம்ஸ் வீசினார். எப்படியும் குஜராத் அணி தான் வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சாம்ஸ் அதிர்ச்சி அளித்தார்.
முதல் பந்தில் ஒரு ரன், இரண்டாவது பந்து டாட் ஆனது. 3வது பந்தில் திவாட்டியா ரன்-அவுட் ஆனார். 4வது பந்தில் ஒரு ரன் மும்பை அணி எடுக்க, கடைசி இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் அடித்தால் வெற்றி என்ற நிலை உருவானது.
டேவிட் மில்லர் எப்படியும் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்து விடுவார் என்று ரசிகர்கள் நினைத்தபோது, சாம்ஸ் இரண்டு பந்துகளையும் டாட் ஆக வீசினார். இதனால் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை த்ரில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் கடைசி ஓவரை துல்லியமாக வீசியது குறித்து டேனியல் சாம்ஸ் கூறுகையில், 'இந்த சீசனின் தொடக்கத்தில் இரண்டு போட்டிகளில் நான் நன்றாக செயல்படவில்லை என்பதை கவனித்தேன். துடுப்பாட்ட வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பற்றி அதிகம் சிந்தித்தேன்.
என்னுடைய கடைசி பந்து எது என்பதில் கவனம் செலுத்துவது தான் எனது திட்டமாக இருந்தது, குறிப்பாக இறுதி ஓவரில். துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக களம் இருந்தது. அதனால் இந்த முறை wide line-க்கு உள்ளே தான் பந்து வீச வேண்டும் என தெளிவாக இருந்தேன். அதே போல் வேகம் குறைந்த பந்து தான் உதவும் என்றும் நினைத்தேன். அதற்கு பலன் கிடைத்து விட்டது' என தெரிவித்துள்ளார்.