பல்லேகேலேவில் மாயாஜாலத்தை நிகழ்த்தியது எப்படி? இலங்கை கேப்டன் விளக்கம்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறித்து தசுன் ஷனக விளக்கமளித்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி பல்லேகேலேவில் நடந்த கடைசி டி20 போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.
அவுஸ்திரேலியா நிர்ணயித்த 177 ஓட்டங்கள் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி, 14வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு மேலும் 6 ஓவரில் 79 ஓட்டங்கள் தேவை என்ற சூழல் இருந்தது.
கடினமான சூழலில் களத்தில் இருந்த இலங்கை கேப்டன் தசுன் ஷனக ருத்ரதாண்டவம் ஆடினார். கடைசி ஓவரில் 4 பந்துகளில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஷனக தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை விளாசிய நிலையில், அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் சிக்ஸர் அடித்து அரைசதம் கடந்தார்.
Image: Sri Lanka Cricket
கடைசி பந்து வைடாக சென்றால் இலங்கை அணி மிரட்டல் வெற்றி பெற்றது. தசுன் ஷனக 25 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசியிருந்தார். இந்நிலையில், மிரட்டலான ஆட்டம் குறித்து இலங்கை கேப்டன் தசுன் ஷனக கூறுகையில், 'இது போன்ற ஒரு இன்னிங்ஸை ஆட முடிந்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. கடைசி மூன்று ஓவர்களில், ஒரு ஓவருக்கு மூன்று பவுண்டரிகள் அடிக்க வேண்டும் என்பது எனது திட்டம். அதாவது 54 ஓட்டங்கள் [எல்லா பவுண்டரிகளும் சிக்ஸர்களாக இருந்தால்].
நாங்கள் பெறும் ஒவ்வொரு ரன்னுடனும், ஒரு வாய்ப்பு இருக்கும். அதேபோல் எல்லாமே தவறாகப் போகும் வாய்ப்பும் இருந்தது, ஆனால் என்னால் முடிந்ததைச் செய்ய முடிந்தது. இது எனக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இலங்கை மக்கள் குறித்து கூறுகையில், 'இலங்கையில் மக்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் தேவைகளைப் பெறவில்லை. இருந்தபோதிலும் அவர்கள் எங்களுக்கு நிறைய ஆதரவளித்து வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வழங்கத் தயாராகி வருகிறோம்' என தெரிவித்துள்ளார்.