மகள் பிறந்த மறுநாளே ரூ.1.5 கோடி லொட்டரி பரிசு
Daughter Brings Luck, Carpenter Wins Rs 1.5 Crore: மகள் பிறந்த மறுநாளே தந்தைக்கு லொட்டரியில் ரூ.1.5 கோடி பரிசு விழுந்துள்ளது.
ரூ.1.5 கோடி லொட்டரி பரிசு
பஞ்சாப் மாநிலத்தின் மான்சா மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான தச்சர் யுத்வீர் சிங் வாழ்க்கையில் மறக்க முடியாத இரட்டை மகிழ்ச்சி நிகழ்ந்துள்ளது.
அவரது மகள் பிறந்த மறுநாளே ரூ.1.5 கோடி மதிப்புள்ள மாநில லொட்டரியின் முதல் பரிசு அவருக்கு கிடைத்துள்ளது.

நவம்பர் 6-ஆம் திகதி யுத்வீர் சிங்கின் மனைவி ஹர்மன் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து, நவம்பர் 7-ஆம் திகதி வெளியான பஞ்சாப் மாநில Dear 200 மாதாந்திர லொட்டரி முடிவில், முதல் பரிசான ரூ.1.5 கோடியை அவர் வென்றிருப்பது தெரியவந்தது.
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற வழியில்
கர்ப்பிணியான தனது மனைவியை மருத்துவ பரிசோதனைக்காக மான்சாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலிருந்த லொட்டரி கடையில் முதல் முறையாக ஒரு டிக்கெட்டை வாங்கியதாக யுத்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
மருத்துவச் செலவுகளுக்கே பணம் தேவைப்பட்ட நிலையில் லொட்டரி வாங்கியதற்கு அவரது மனைவி ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்த மகள்
குடும்பத்தினர் சிலர் “பெண் குழந்தை பிறந்துள்ளது, ஆண் குழந்தை பிறந்திருக்கலாம் என எதிர்பார்த்தோம்” என்று கூறியதாகவும், ஆனால் தனது மகள் குடும்பத்திற்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் யுத்வீர் பெருமையுடன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தனது மகளுக்கு “பர்கத்” (செழிப்பு) என்று பெயர் சூட்டியுள்ளார்.
2024-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட யுத்வீர் சிங், தினக்கூலி தொழிலாளியான தந்தையுடன் எளிய வாழ்க்கை நடத்தி வந்தார். குடும்பத்தின் இரண்டு அறை வீட்டை கட்ட கடன் வாங்கியிருந்தனர். அந்த கடனையும், குடும்பத்தின் பொருளாதார சிரமங்களையும் இந்த பரிசுத் தொகை தீர்க்கும் என நம்பப்படுகிறது.
மகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காகவே இந்தப் பணத்தை பயன்படுத்த விரும்புவதாகவும், அவள் நல்ல கல்வி பெற்று சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதே தனது கனவு என்றும் யுத்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |