10 ஆம் வகுப்பு தேர்வில் தாய்க்கு பதிலாக மகள் தேர்வெழுதி ஆள்மாறாட்டம்.., கண்டுபிடித்தது எப்படி?
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தாய்க்கு பதிலாக தேர்வு எழுதிய மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்வில் ஆள் மாறாட்டம்
தமிழகம் முழுவதும் கடந்த 28-ம் திகதி முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று காலை நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன்-தமயந்தி பள்ளியில் ஆங்கில தேர்வு நடைபெற்றது.
அப்போது, தேர்வு கண்காணிப்பாளர்கள் வினா மற்றும் விடைத்தாளை தேர்வு எழுதுபவர்களிடம் கொடுத்துவிட்டு கையொப்பம் பெற்றனர்.
அப்போது தனித்தேர்வராக தேர்வு எழுதிய பெண் முகக்கவசம் அணிந்திருந்ததால் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர் அவரை முகக்கவசத்தை அகற்றும்படி கூறினார்.
பின்னர், அவருடைய நுழைவுசீட்டை வாங்கி சோதித்தார். அப்போது, அதில் இருந்த புகைப்படமும் தேர்வு அறை கண்காணிப்பாளர் வைத்திருந்த வருகை பதிவு குறிப்பேட்டில் இருந்த புகைப்படமும் ஒத்துப் போகவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த கண்காணிப்பாளர், அந்த பெண்ணை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றார். பின்னர், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தனித்தேர்வு) முத்துச்சாமி, தேர்வு கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் அவர் நாகை வெளிப்பாளையத்தைச் சேர்ந்த செல்வாம்பிகை(வயது 25) என்பது தெரிய வந்தது.
இவருக்கு திருமணம் ஆகியுள்ள நிலையில், தனது தாய் சுகந்தி என்பவருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்துள்ளார். இதேபோல, கடந்த 28-ம் திகதி நடைபெற்ற தமிழ் பாடதேர்வை முககவசம் அணிந்து எழுதியுள்ளார்.
பின்னர், அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |