95-ல் அவுட் ஆகி வந்த போது சிறுவனுக்கு சர்பிரைஸ் கிப்ட் கொடுத்த வார்னர்! ஆஷஸ் டெஸ்ட்டில் நடந்த சுவாரஸ்ய காட்சி
இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷாஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இளம் ரசிகருக்கு டேவிட் வார்னர் பேட்டிங் க்ளோஸை பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அங்கு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே கடந்த 8-ஆம் திகதி நடைபெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று(16.12.2021) துவங்கியது. முதலில் பேட்டிங் ஆடி வரும் அவுஸ்திரேலியா அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
துவக்க வீரரான டேவிட் வார்னர் 167 பந்தில் 95 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.
அப்போது அவர் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் இடத்தை நெருங்கிய போது, திடீரென்று தன்னுடைய பேட்டிங் க்ளோஸை அங்கிருந்த சிறுவன் ஒருவனுக்கு பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.