பட்டப்பகலில் நடந்த பயங்கர கொள்ளை: கொள்ளையடித்த பணத்தை என்ன செய்தார்கள்?
இந்திய தலைநகர் புதுடெல்லியில், பட்டப்பகலில் ஒருவரிடம் 3.35 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
கொள்ளையர்கள், தாங்கள் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு தங்கள் கடனை அடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
பட்டப்பகலில் நடந்த பயங்கர கொள்ளை
இம்மாதம் 2ஆம் திகதி, நிதி நிறுவனம் ஒன்றிற்காக பணம் வசூலிக்கும் கமல் சிங் என்பவர், பணி முடித்து அலுவலகம் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், திடீரென யாரோ அவரை தலையில் பலமாக தாக்கிவிட்டு அவரிடமிருந்த 3.35 லட்ச ரூபாய் அடங்கிய பையை பிடிங்கிக்கொண்டு ஓடியுள்ளார்கள்.
இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற கமல் சிங்கின் புகாரின் பேரில் பொலிசார் குற்றவாளியைத் தேடத்துவங்கியுள்ளார்கள்.
சந்தேகத்துக்குரிய நபர்களில் சந்தீப் என்னும் நபர் தலைமறைவானது தெரியவரவே, பொலிசார் அவரது மொபைல் உதவியால் அவர் உத்தரப்பிரதேசத்தில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
நேற்று, சந்தீப்பும் அவரது கூட்டாளியான பரசுராம் நிஷாத் என்பவரும் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்கள்.
கமல் சிங் பணம் வசூல் செய்வது குறித்து அறிந்திருந்த சந்தீப், தனது கூட்டாளியான பரசுராமுக்கு அது குறித்து தகவல் கொடுக்க, ஒரு துணியில் கற்களை மூட்டையாகக் கட்டி அதைக் கொண்டு கமல் சிங்கைத் தாக்கி, பணத்தைப் பறித்துக்கொண்டு ஓடியுள்ளார் பரசுராம்.
கடனை அடைத்த கொள்ளையர்கள்
கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு தங்களுக்கு இருந்த கடன்களை அடைத்துள்ளார் சந்தீப். பரசுராம் தன் தாயின் வங்கிக்கணக்கில் 45,000 ரூபாய் செலுத்தியுள்ளார்.
பொலிசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன், பணத்தை திரும்பப் பெறும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள்.