பஞ்சாப் அணியை சிதறடித்த டெல்லி அணி - 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 32வது லீக் ஆட்டமானது மகாராஷ்ட்ராவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி டெல்லி பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அதிகப்பட்சமாக கேப்டன் மயங்க் அகர்வால் 24, ஜிதேஷ் சர்மா 32 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாயினர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெல்லி தரப்பில் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், கலீல் அகமத் , லலித் யாதவ் தலா ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் கண்ட டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் ப்ரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் பஞ்சாப் வீரர்களின் பந்தை விளாசி தள்ளினர். ப்ரித்வி ஷா 40 ரன்களில் அவுட்டாக, வார்னர் சிறப்பாக ஆடி 60 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் 10.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.